முகம்!
மாலைப் பொழுதுகளில் பறந்து வந்து
மலரில் முத்தமிட்டுச் செல்லும்
ஒரு தேன்சிட்டுப் பறவையின் சிறகடிப்பை
ஏரிக்கரை ஒற்றைப் பனைமரக் கிளியின்
பாட்டில் கவ்விய சோகத்தை
எருக்கம் பூவின் வாசத்தை நுகர்ந்து
வட்டமிட்டுக் கொண்டிருக்கும் ஈக்களின்
சிருங்காரத்தை
கூரை மீதமரும் அமாவாசைக் காக்கையின்
'கா கா கா” கூவிளிப்பை
கொய்யா மரத்தின் கிளையில் 'கிறீச் கிறீச்” என
கொரித்துத் திண்ணும் அணிலின் தாவுதலை
தென்னை உச்சியில் அமர்ந்து 'க்கூவூ க்கூவூ” எனக்
கூவிக் கொண்டிருக்கும் குயிலை
வேறொரு கற்பனை முகங்களாக்கிக் கொள்ள
எனக்கு வேறொரு
காலியான தாள்கள் கொஞ்சம்
கிடைத்தால் போதும்!
நிச்சயம் அவை நீங்கள் எண்ணுகிற
உருவமாக இருக்காது!
- இல. பிரகாசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.