ஒழுங்கற்ற வரிசை!
எல்லாவற்றையும் சரித்துப் போட்டு
அவற்றை மேலும் மேலும் கலைத்து விட்டு
மீண்டும் அடுக்குவது போல
என் எண்ணங்களை ஒன்றன் பின் ஒன்றாக
'அ”கர வரிசையிலோ அல்லது
'க”கர வரிசையிலோ அல்லது
குறில் எழுத்துகள் வரிசையிலோ
நெடில் எழுத்துகள் வரிசையிலோ அடுக்கி வைக்க
நெடுநாளையச் சிந்தனையைச் செய்து கொண்டிருக்கிறேன்.
கருவுற்ற நாளிலிருந்தா? அல்லது
தாயிமிருந்து வெளிவந்த நாளிலிருந்தா?
இன்ன முகம் இவர்கள் என்று தெரிந்த நாளிலிருந்தா?
இடையிலா? அல்லது ஏதேனும்
ஒரு குறிப்பிட்ட நிகழ்வுகளின் நாளிலிருந்தா?
எந்த காரணமுமின்றி நகர்ந்த நாட்களின் சுமைகளைக்
கழித்து விட்டா?
ஏதேனும் ஒரு சுயத்தை மறைத்து விட்டா?
அவ்வப்போது ஏற்பட்ட சபலங்களை எந்த
ரகசியக் குறியீடுகளைக் கொண்டு
யாரிடமிருந்து மறைத்து வைப்பது?
போன்ற சிந்தனைகள் அடுக்கடுக்காக எழுகின்றன.
முதுகில் வளைந்த எழும்புகள் 'தேயத்தேய”
அவற்றின் தேய்ந்த பகுதிகளில் என்னுடைய
இலக்கமிடப்படாத நிகழ்வுள் சிறு அச்சிடப்பட்ட
புத்தகங்களாகவோ அல்லது காகிதக் கட்டுக்களாகவோ?
ஏதேனும் ஒரு வரிசையில் எப்படிப் பார்க்கினும்
ஒழுங்கற்றுதான் காணப்படும் -அவற்றுக்கு
நானே சாட்சி!
- இல. பிரகாசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.