இனியொரு விதி செய்வோம்
விதியொன்று செய்திடுவோம் நாட்டிற் குள்ளே
வீணாகப் பாய்ந்துகடல் கலக்கும் எல்லா
நதிகளினை இணைத்திடுவோம் ! எதிர்ப்போர் தம்மை
நம்நாட்டுக் குடிமகன்கள் இல்லை யென்போம் !
நிதியொதுக்கத் தடைசெய்யும் ஆட்சி யாளர்
நின்றெதிர்க்கும் அரசியலார் கூட்டம் தம்மைச்
சதிசெய்வோர் எனவழக்கு பதிவு செய்து
சாம்வரையில் சிறையடைக்க வழியைச் செய்வோம் !
சட்டமொன்றை இயற்றிடுவோம் ! தேர்தல் தன்னில்
சரியான சொத்தளவைக் காட்டா தார்க்கும்
திட்டமிட்டே ஊழல்செய் ஆட்சி யாளர்
திருடுகின்ற அரசாங்க அலுவ லர்கள்
கட்டாய வரதட்ச ணையைக் கேட்கும்
கயவர்க்கே வாக்குரிமை; எழுதப் பேசப்
பட்டாசெய் சொத்துரிமை இல்லை யென்றே
பரதேசி நிலையாக்க வழியைச் செய்வோம் !
இலவசங்கள் இல்லையென்று சட்டம் செய்தே
இருப்போர்க்குப் பணிவாய்ப்பை உறுதி செய்வோம்
நலம்பயக்கும் திட்டங்கள்; உழைப்போ ருக்கே
நாள்மூன்று முறையுண்ண உரிமை என்போம்
நிலமெல்லாம் பொதுவுடைமை மலைகள் காடு
நீர்நிலைகள் தமக்கூறு செய்வோ ருக்குக்
குலத்தோடு தண்டனைகள் என்றே செய்தால்
குனியாமல் இந்நாடு நிமிர்ந்து நிற்கும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.