கடைசிப் பக்கம்

தலைப்பெழுத்து முதல் அதன் வடிவம்
புதிய கிளர்ச்சியையூட்டுகிறது.
உள்ளே சில பக்கங்கள் சில தகவல்கள்
வியாபார நுணுக்கம்.
இன்னும் சில பக்கங்கள் சிலாகிப்புக்கள்
'அப்படி இப்படியென சிலரின் புகழுரைகள்’
அடுத்தப் பக்கம்
தாளின் முதல் வரியில் குறுகிய இடைவெளி
பின் முதலெழுத்து கொட்டை வடிவில்
தொடங்குகிறது!
அது ஒரு நாவலாக இருக்கலாம்
நீங்கள் விரும்பும் கவிதை நூலாக இருக்கலாம்
நீங்கள் விரும்பும் ஒருவரின்
நாடக நூலாக இருக்கலாம் அல்லது
நீங்கள் விரும்பும் ஒருவரின்
கட்டுரைத் தொகுப்பு நூலாக இருக்கலாம் அல்லது
நான் குறிப்பிடப்படாத அந்த
நீங்கள் விரும்பும் ஒருவரின் நூலாக இருக்கலாம்
தாள்களில் முதலில் தெரிவது
முதலெழுத்து அவரது முகமாகத் தெரியலாம்
அல்லது அவரது குரல்
உங்களுக்குப் பரிச்சயமெனில் அக்குரல்
உங்கள் முன் வந்து உரையாடலாம்
இன்னும் சில பக்கங்கள் அக்குரல்
இறங்கி வந்து உங்கள் விரல் பிடித்து
அடுத்தடுத்த வரிகளை வாசித்துக் காட்டலாம்
அந்த வரிகள் உங்களை மயக்குமெனின்
மீண்டும் மீண்டும்
உங்களை இன்பத்தில் துய்க்கச் செய்யலாம்
உங்களை எதிர்பாராத மாயத்தில் ஆழ்த்தலாம்
நூலின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட
முதலெழுத்து முகத்தின் உணர்ச்சிகள்
தவழ்ந்து தவழ்ந்து உங்களை ஆக்கிரமிப்புச் செய்யலாம்
நூலின் நடுப்பகுதி உங்களை
ஒரு வனத்திற்கோ அல்லது
ஒரு பாலைவனத்திற்கோ அல்லது
ஒரு மலைச்சாரலின் முகட்டிற்கோ
ஒரு கடலின் அலைக் கரங்களின் முன்னோ
அங்கே ஏற்படுகின்ற சிறுசிறு ஓசைகள்
நிகழும் காட்சியின் முன்னோ
நீங்கள் ஏதுமறியாத புறத்தைத் தாண்டிய
நீங்கள் தொலைந்தது போன்றவொரு மாயையோ
அவை உங்களுக்குத் தரலாம்.
அவைகளுடன் சேர்ந்து முதலெழுத்து முகம்
உங்களுடன் பயணம் செய்யலாம்.
நூலின் நடுப்பகுதிக்கும் கடைசிப்பகுதிக்கும்
இடையில் காற்றில் மிதந்தபடி அலையும்
சில பக்கங்கள்
அதனுள் நடித்துக் கொண்டிருக்கும் பாத்திரங்கள்
சிறுசிறு சலசலப்புகளுண்டான காட்சியமைப்பிலோ
பீறிட்டெழும் உணர்ச்சிகளுடனோ
வெளிறிய சிரிப்புகளுடனோ
உங்களை தொட்டுப்பார்த்துப் பேசிக் கொண்டிருக்கலாம்
இப்பொழுது முதலெழுத்தின் குரலுடன்
உங்கள் குரல் இசைவுடன் உரையாடிக்
கொண்டிருக்கலாம்.
கடைசிப் பக்கத்திற்கு முந்தைய பக்கம்
உங்களை உருமாற்றம் செய்து
உங்களை ஒரு நிகழ் பாத்திரமாக
நிறுத்தி வைத்திருக்கலாம்.
கடைசிப்பக்கம் சில வரிகளின் முன்
உங்கள் பாத்திரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை
நீங்கள் உணரலாம்.
கடைசிப்பக்கத்தின் கடைசி வரிகளில்
அக்குரல் உங்களுக்கு நன்றியைத்
தெரிவித்துக் கொண்டிருக்கலாம்
கடைசியெழுத்து
காட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தபின்.
- இல. பிரகாசம், தலைவாசல் அஞ்சல், ஆத்தூர், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.