தொடுதிரை!

தொடுதிரை வெளிச்சம்
சிறு சத்தங்களுடன் ஒரு ஒளிர்தலுடன்
நான் எதிர்பார்த்திராத அல்லது
நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த –அந்த
குறுஞ்செய்தியை தந்துவிட்டு அமைகிறது!
தொடுதிரைகளைத் தொட்டுணராத
அன்றைய நாட்களை
என் மாயவிரலான ஆறாம் விரல்
நொடித்துப் போயிற்றென்றோ? இல்லை
நெடிய தூக்கத்தைத் தொடுதிரைகளுக்குள்
தொலைத்து விட்டதென்றோ?
அன்றைய இரவுப் பொழுதுகள்
விரும்பியவருடன் ரகசிய உரையாடல்களுக்கு
ஏங்கிக் கொண்டிருக்கும்! அல்லது தான்
விரும்பிய ஏதேனும் ஒரு காணொளியை
விழிபிதுங்கப் பார்க்க எண்ணக் கூடும்!
அவ்வப்போது சில காட்சித் தொகுப்புகள்
பதிவிறக்கம் செய்கிற போது
சில 'நச்சு நிரல்”கள் செயலிகளிடையே ஊடுருவிப்
படையெடுத்து விடுகின்றன!
தொடுதிரை மெல்ல மெல்ல நஞ்சை உமிழ
ஊர்ந்து வரும் சர்ப்பம் போல்
என் வாழ்வில் சில தவிர்க்க முடியாத
ஏதோவொரு சிறு பகுதியை
ஒவ்வொரு நாளும் சிறு வெளிச்சத்துடன்
தனக்கெனக் கொத்தி எடுத்துக் கொள்கிறது
இன்னும் எனக்குப் புரியவில்லை பிடிபடவில்லை
தொடுதிரை வெளிச்சத்தின் ஒரு மூலையில்
தொட்டுணராத இருட்காட்சி
எங்கே இருக்கிறதென!
என் விரல்கள் அவற்றின் ஆடையை
உரித்துப் பார்ப்பது போல் சில காட்சிளை
துலாவிக் கொண்டிருக்கும்.!
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.