இழிவான நிலை!
தாலாட்டினாள் அன்னை
தெருவில் தவிக்க விட்டாய் நீ
தோளில் சுமந்தாள் அன்னை
தூக்கி எறிந்தாய் நீ
நடை பயில நடைவண்டி தந்தாள் தாய்
நடை தளர்ந்த போது கைவிட்டாய் நீ.
கடுமையாய் உழைத்தாள் உனக்காக
கடுகளவும் இரங்கவில்லை அவளுக்காக நீ
உன் படிப்புக்காகப் பிறரிடம் கையேந்தினாள்
உணவுக்காக அவளைக் கையேந்த வைத்தாய்
தினமொரு ஆடை அணிவித்து மகிழ்ந்தாள்
அழுக்கு ஆடையோடு அலையவிட்டாய் நீ.
அடுக்கு மாளிகையில் அறைகள் பல இருந்தும்
அவள் தலைசாய்க்க இடமின்றி ஒதுக்கி விட்டாய் நீ
நாய்க்குக் கூடத் தனி அறை உள்ள உன் வீட்டில்
நாயை விடத் தாழ்ந்து விட்டாளா உன் தாய்
உடலில் பலமுள்ள வரை வேலைக்காரியாய்
உடல் பலமிழந்தால் உனக்குப் பழுவாய் அவள்.
வாழ்நாள் நீடிக்கத் தாய் தந்தையைப் பேணு
இது விவிலியம் கூறும் மொழி
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
இது ஔவை கூறும் மொழி
பெற்றோரைப் போற்றி வாழ்ந்து உயர்வாய்
தவறினால் இதைவிட இழிவான நிலை உனக்கும்...
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.