அளக்க இயலாப் புகழோனே!
புரட்சித் தலைவா!
திரை உலகில்
நிரந்தர அழகன் நீ மட்டுமே!
அகம் புறம் இரண்டிலும்...
மக்கள் திலகமே!
உன்னை ‘வாத்தியார்’
என்றழைத்தனர் ரசிகர்கள்
என்றும் நீ உன்
படங்கள் வழியே
பாடங்களை நடத்தியதால்...
பொன்மனச்செம்மலே!
மனிதர், நடிகர், தலைவர்
மூன்றிலும் நீ முதல்வர்
மூன்று முறையும் முதல்வர்
மக்களன்பிலும் முதல்வரே...!
இதய தெய்வமே!
தாயுள்ளத்துடன் நீ
தந்த சத்துணவுத் திட்டம்
மனிதநேயத்தின் உச்சம்
கொடுத்துச் சிவந்த கரமே!
வாரிக் கொடுத்ததில் நீ
பாரியின் வம்சம்
ஏழைமக்களைக் காத்ததில்
சாமியின் அம்சம்
கலியுகக் கடவுளே!
ஆகாயம் போல் உயர்ந்த
அளக்க இயலாப் புகழோனே!
அடியேன் ‘சான்’ அளவே புகழ்ந்தேன்
அடடா! உன் புகழ் ‘தேன்’
- ம. கவிக்கருப்பையா, பூதிப்புரம், தேனி மாவட்டம்.
பட்டங்கள்
மேற்காணும் கவிதையில் காணும் எம்.ஜி.ஆருக்கான பட்டங்களும் அதை வழங்கியவர்களும்:
* புரட்சித் தலைவர் - கழகத் தோழர்கள் கொடுத்த பட்டம்
* மக்கள் திலகம் - கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் கொடுத்த பட்டம்
* வாத்தியார் - நெல்லை ரசிகர்கள் கொடுத்த பட்டம்
* பொன்மனச்செம்மல் - கிருபானந்த வாரியார் கொடுத்த பட்டம்
* இதய தெய்வம் - பொதுமக்கள் கொடுத்த பட்டம்
* கொடுத்துச் சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள் கொடுத்த பட்டம்
* கலியுகக் கடவுள் - பெங்களூர் தலைமை நகர விழாவில் கொடுக்கப்பட்ட பட்டம்
(நன்றி: டாக்டர் எம்.ஜி.ஆர் ஆய்வடங்கல் - மல்லிகா பிரபாகரன்)

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.