அவனாகிய நானும்...! நானாகிய அவனும்...!!
அவனுக்கும் எனக்கும்
எந்த இடத்தில் பிணக்கு
வந்ததென யோசித்துக் கொண்டிருக்கிறேன்
இருவருக்கும் ஒரே ரசனை இருந்தது
இருவருக்கும் ஒரே மனதும் இருந்தது
சமீபமாகத்தான் இந்த மாற்றம்
நான் சொல்வதை கேட்கூடாதென்பதை
அவன் கொள்கையாய் வைத்திருப்பதாய் நினைக்கிறேன்
ஏதேனும் ஒன்றில் மூழ்கி விடுகிறான்
இழுத்து வரவே பெரும்பாடாய் இருக்கிறது எனக்கு
பட்டாம்பூச்சியின் நிறத்தை வியந்தவன்
இன்றெல்லாம் சிறகை பிய்த்து பறபறவெனக் கத்துகிறான்...
மலையுச்சியின் மேலிருந்து
உருண்டு வரும் நீர்த்துளிகளைப் போல
அவன் கனவு உருள்வதை என்னால் பார்க்க முடிகிறது...
இருவருக்குமே ஒவ்வொரு முறையும்
மீட்டெடுத்தலில்தான் பிரச்சனை வெடிக்கிறது...
எவ்வளவோ கேட்டுக் கொண்டும்
மாறாமலிருக்கும் அவனாகிய நானும்
நீ சொல்வதை ஏன் கேட்கவேண்டுமென
வீராப்பு காட்டும் நானுமாகிய அவனும்
வேறு வேறல்ல இருவரும் ஒருவரே
ஒருவருக்குள் பலர் இருக்கிறார்கள்
என்பதைப் புரியவைக்க வேண்டிதான்
நானே இருவராக உருமாறினேன்
மற்றபடி நான் நானாகவே இருக்கிறேன்
அடுத்த சந்தர்ப்பம் வரும்வரை
அப்படியேதான் இருப்பேன்...!
- கரூர் பூபகீதன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.