இங்க வாழ வர வேணாம்!
அவரை துவரை விளஞ்சு கிடக்கும்
அவிச்சு திங்க பொடுசுகள் பதுக்கி வைக்கும்
மாங்கா தேங்கா காய்ச்சுத் தொங்கும்
மரமேறி ருசிபார்த்து நெஞ்சுநிறைக்கும்
பச்சையம் தடவிய காடுக
இப்பப் பதறுதய்யா
உண்டு வளர்ந்த மாடுக
வண்டியேறு தய்யா
நாத்துநட ஆள்பிடிக்க அலையும்
ராப்பகலா பேச்சுவார்த்த தினம் நடக்கும்
கதிரு சுமந்தே கழுத்தும் வலிக்கும்
குவிஞ்ச தானியம் பார்த்துப் பெருமபேசும்
மவராசி கொத்திடுவானு மானங்கெட்டு
முளச்சியா கழையே -கிழவிக புலம்பும்
ஆளில்ல விளஞ்சுடாத
தமாசு கவலையா -அவுக வாயும் மெல்லும்
காலாறச் சுத்திவந்த காலம் போச்சு
வயித்த வளர்க்கப் போறேன் நகரமாச்சு
நீங்க இங்க வாழவர வேணாம்
எப்படி வாழறோம்னு பார்க்கவாவது வாங்க!!
- கரூர் பூபகீதன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.