துளிர்க்க மறுக்கும் தளிர்கள்
வறுமைத் தீயில் அகப்படாமல்
அனாதை நோயினில் வெம்பாமல்
வளமான வாழ்வும் கிடைத்து
அழகாய் வளரும் தளிர்கள்
துளிர்த்து மேலும் உயர்ந்திட
கனவும் மெய்ப்பட வளர்ந்திட
துவங்கும் நற்சிந்தனை விடுத்து
கடமை மறுத்து உழல்வதோ!
மண்ணில் நல்ல வண்ணம்
வளர்ந்து நடைபோட மறுத்து
மதிப்பான நேர்வழியை உதறி
வழிதவறி நடக்கும் தளிர்கள்
உலவுகின்ற பாதை மனதை
அலைக்கழிக்கும் கோலம் மெய்யென
உறவை மறுத்தே துளிர்த்திடும்
அறிவை திசைமாற்றி நடப்பதோ!
ஒன்றாய்க் கூடி விளையாடும்
களிப்பானச் செயல்களை மறுத்து
ஒட்டுதல் இன்றி தனித்து
கணினி கதியெனத் தளிர்கள்
விரும்பி உறவாடலை ஒதுக்கியே
தனிமை கூட்டில் அடைபட்டு
விட்டேற்றியாய் உள்ளார்ந்த அன்பில்
துளிர்த்து சிறப்படைய மறுப்பதோ!
- நாகினி, துபாய்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.