அன்பில் ஏழையாயிருப்போம்
செல்வம் நிறைந்த வீடு
அன்பு குறைந்த வீடு
தன்னை மட்டுமே பார்க்கும்
தாராள குணம் அங்கு
அன்னை என்றாலும் கூட
அரவணைப்பார் அங்கில்லை.
தெருவோர வாழ்க்கை அவர்களுக்கு
தரும் அன்புக்கு நிகரில்லை
படுக்கக் கிழிந்த பாய்கூட இல்லை
அன்னை மடியும் அக்கா மடியும்
பஞ்சு மெத்தையாய் மாறும் அங்கே
கூடிப்படுத்தால் தான் தூக்கமே வரும்.
சாப்பாட்டு மேசை நிறைய
விதவிதமாய் உணவு அங்கே
தனித்தீவில் அகப்பட்ட மனிதனாய்
சாப்பிடுவார் தனித்தனியாய்
கூடிப்பேசி சாப்பிடக் கொஞ்சமும் நேரமில்லை
எரிபொருளாய் நிரப்புகிறார் உணவை அங்கே.
ஆங்காங்கே கிடைக்கும் உணவு
கலவையாய் ஒரே தட்டில்
சுவை மணம் பெரிதில்லை இங்கு
அன்பைக் கலந்த உணவானதால்
அமிர்தமாய் ருசிக்கும் ஏழை வீட்டில்
அன்பைச் செலுத்துவதில் ஏழையாயிருப்போம்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.