இனியாவது தடுத்திடுங்கள்!
நெல்லுக்கு வேலியிட்டுக் காத்த
திருநெல்வேலியில் இன்று
காப்பாற்றுவாரின்றி நெருப்பில்
கருகியது நான்கு உயிர்
ஆண்டவன் காத்தது அன்று
ஆட்சியர் காப்பாற்றாதது இன்று.
பிள்ளையின் உடம்பில்
சிறு பொறி பட்டாலும்
துடித்துப் போகும் தாயும்
துவண்டு போகும் தந்தையும்
பற்ற வைத்தார் நெருப்பை என்றால்
அவமானத்தின் உச்சம் தான்.
ஏழையின் உழைப்பை
மொத்தமாய் சுரண்டும் கந்துவட்டி
உயிரையும் பறித்தது என்றால்
காப்பாற்றாமல் புகைப்படமெடுத்து
மனிதநேயம் செத்து விட்டதை
உலகுக்கே சொன்னார்கள் சிலர்
நான்கு உயிர் மண்ணுக்குள்
விரைந்து பிடிக்கிறார்களாம்
உயிர் பறித்த கயவனை
கந்துவட்டியை விடக் கொடுமை
கடமையில் தவறுவது அதிகாரிகளே
இனியாவது விழித்துத் தடுத்திடுங்கள்
உயிர்ப் பலியை!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.