ஒற்றை ஊமைக் கண்!
அவற்றிற்கென இருப்பது
ஒற்றைக் கண் மட்டுமே
என்றாலும்
உங்களைப் போல
என்னைப் போல
அவர்களைப் போல
தசைகளால் புனையப்பட்ட
ரத்த ரேகைகள்
அவற்றுக்கு நிச்சயம் இல்லை
அவை உங்களின்
என்னுடைய
நாம்
அவர்கள் சார்ந்த ரகசியங்களை
விழி இமைக்காது
இக்கணத்தின் நிகழ்வில்
நொடியில் அகலாத நிழலைப் போலவே
நின்று வெறித்துப்
பார்த்துக் கொண்டுதானிருக்கின்றது
இந்த நொடி வரையிலும்
அக்கண்கள் ஒருவனின்
இருரேகைக் கைகளால்
துளையிடப்பட்டு
ஊமையாக்கப்பட்டிருக்கிறது
அவன்
அவற்றுக்குச் சொற்களைச்
செதுக்காமல் விட்டுவிட்டான்
எத்தனையோ நிறங்களைக் காட்சிகளை
நிர்வான நிலையிலேயே
ஒற்றை ஊமை விழியால்
செரித்துச் செரித்துத்
திண்று கொண்டேயிருக்கிறது
ஒளி வெள்ளத்தைக் கவ்விக் கொண்டு
காட்சியை
தன்னுள் ஒளித்திருக்கும்
'கும்’மிருட்டு நிழல்
அவற்றின் கண் பார்வை
அகத்தையும்
புறத்தையும் காட்சிவடிவில்
பூனைப் பார்வைகளுக்குக்
கடை திறப்புச் செய்கிறது!
சிறுசிறு மேடு பள்ளங்களை
பற்களாகக் கொண்ட
கருவிகள் தீண்டிய கணத்தில்
தன் கற்பை விருந்தாக்கிச்
சமைத்துக் கொடுக்கிறது!
அது ஒருவனின்
இருரேகைக் கைகளால்
இழைத்து இழைத்து
வார்த்தெடுக்கப்பட்ட
ஒற்றை ஊமைக் கண்!
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.