கிராமத்து மந்திரம்
அடிக்கடி கேட்டுப் பழகிய அந்தச் சொல்லை
இன்று நான் காணும்
இந்த முகங்கள் மறந்துவிட்டன.
வழிநெடுக அந்தச் சொல் பரவியிருப்பதாக
ஒரு கனவு ஓடியபடி இருக்கிறது.
புறப்படத் தயாராகிக் கொண்டிருக்கும் போது
நான் அந்தச் சொற்களை
ஒவ்வொரு முறையும் மிக ஆழமாக
உள்வாங்கிக் கொண்டு கேட்டிருக்கிறேன்.
வாசலின் கீழ்படியை தாண்டிவந்து
பத்து விரல்களையும் ஒரே நேரத்தில்
அழைப்பது போல் நீட்டியும்
அடுத்த கணத்தில் கபாலத்தில் வைத்து அழுத்தவும்
படீலென ஒரு முறிவு போல சத்தம்
அப்படிக் கேட்கும் சிரித்த முகத்தோடு
பின்னாடி அவள் சொல்வாள் இப்படியாக
'நல்லது நல்லபடியா போயிட்டு வா”
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.