எச்சங்கள்...?

இடையில் ஏதேதோ பேச்சுக்கள்
அவ்வளவும் முற்றுப் பெறாதவைகள்
அவைகளை
அவன் வழக்கப்படி இப்படிச் சொன்னான்
'எச்சம்” என்று.
*****
இடையிடையில் தொடர்ந்த பேச்சுகள்
எச்சமாகி நின்ற எச்சத்தை
வழவழ கொழகொழவென இழுக்காது
அரைப்புள்ளியையும் காற்புள்ளியையும்
அவ்வப்போது இடையிடையே குறியுமிட்டு
தொடர்ந்து கொண்டிருந்தான்.
இல்லை. இல்லை. கொண்டிருந்த
போது பெயரெச்சமாகிவிட்டதென
புளிப்பாய்ச் சொன்னேன்.
மீண்டும் அவன் பதிலிறுத்தான்
இடித்த.. த்அ
*****
முற்றுப்பெறாத எச்சத்தை ஒரு கதையென்று
முற்றுப்பெறாத காற்புள்ளிக்கு அடுத்த வரியில்
இட்டான் ஓர் அரைப்புள்ளியை
கட்டமைத்துத் தொடங்கியிருந்தான்
'திருமுறையிலிருந்து ஒரு பாட்டு
கம்பராமாயனத்திலிருந்து ஒரு பாட்டு
அரைகுறையாக...
அது சுந்தரகாண்டத்தைப் போல தோன்றிற்று
குகனைப் பற்றிச் சொன்ன பின்னே
வாலியைப் பற்றியும் கொஞ்சம்
பாரதம் பற்றி அது பதினெட்டாம் நாள் போர்
இட்டுக்கொண்டே வந்தான் காற்புள்ளியையும்
இடையில் அரைப்புள்ளியையும்
மீண்டும் கம்பனின் சுந்தரனைப் போல
இப்போது தாவினான்
சங்க நூல்களில் பத்துப்பாட்டில் வந்‘து'
நான் பதிலிறுத்தேன்
வினையெச்சம் ”து”
அழுத்திச் சொன்னேன் 'த்உ”
முற்றெச்சம்..?
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.