விடியும் வரை விழித்திரு!
துர்கா அக்காவுக்குத்
தூக்கம் வராமல் போவதற்குத்
தினம் ஒரு காரணமிருக்கிறது...
உதாரணமாய் முதிர்கன்னியான
அவளின் இன்றைய
பெண்பார்க்கும் படலம் குறித்த
கனவில் நேற்றும்,அதன்
நிராகரிப்பின் வலியில் இன்றும்...
வெகுநேரம் புரண்டு புரண்டு
உடலின் நிலை மாற்றித்
திசை மாற்றிப், பின்
அருகில் படுத்திருக்கும் வயோதிக
அப்பாவின் துயில் கலையா
கவனமுடன்,மெல்லப்
பூனைபோல் பாத்ரூம் நோக்கி
எழுந்து நடந்த போது,
'விடிஞ்சிட்டாம்மா ?' என்று கேட்ட
அப்பாவின் குரலிலும்
உறக்கமில்லாக் களைப்பு ஒட்டியிருந்தது…
'ரொம்ம்…ப நேரமிருக்குப்பா' என்றவாறு
அவரைக் கடந்து போனாள்,
அவர் பாராது ஈரம் துளிர்த்த
கண்களைத் துடைத்தவாறே..!
- ஆதியோகி

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.