நினைவிலிகள்
சர்வ நாசமாக்கப்பட்ட உடல்
தன்னிலை மறந்து
நினைவிலி மொழிக்கிடங்கில் மேய்கிறது
ஒலிக்கூட்டங்கள் அங்குமிங்கும் சுற்றித்திரிகின்றன.
சப்தக்கூட்டங்கள் நிசப்தமாய்
புணர்ந்து கொண்டிருக்கின்றன.
கிடங்கினுள் புகுந்து
நினைவியைத் திண்கிறது.
எலும்புத் துண்டுகளாய்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சிதறிக்கிடக்கின்றன.
அவளது மாய்ந்து போன நினைவிலிகள்
*****
கைகளில் வளைகள் இல்லை
துடியிடையில்லை ஒப்பனைகளில்லை
புலம்பப் பாங்கனுமில்லை
ஆளரவமில்லாத தனித்த அறையில்
பசலை படர்ந்து பெருக்கெடுக்கிறது.
நற்றாயின் இற்செறிப்பில் வீனத் தலைவன்
*****
உடல் செயலிழக்க
நரம்புகள் சுருண்டு
நாக்அவுட் ஆனது.
மருண்ட விழிகள் இமைமூட
கைவிரல்கள் சோர்வடைய
கத்தி, கத்தி நாவறண்டு
நாசியடைத்தது.
ஆடையெல்லாம் நிலமகளுடுத்த
அங்கங்கலெல்லாம்
தோலுரித்துத் தொங்குகிறது
விற்பனைக்கு அல்ல விசாரணைக்கு.
- மழயிசை, ஸ்ரீவில்லிப்புத்தூர்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.