மாற்றுவழிப் பயணமில்லை!
வறுமையைக் கொண்டுப் போகும்
அவனிடத்தில் பசியைத் தவிர
வேறொன்றுமில்லை.
வெளிச்ச உடையணிந்திருக்கும்
பாதி நிலவை விட்டு விட்டு
மெல்ல நகர்கிறது மேகம்.
சுண்டி விட்ட சில்லரைக் காசில்
பூவோ தலையோ ஏதோவொன்று
விழத்தான் போகிறது.
நீர் பார்க்க விழையும் வேர்கள்
கட்டாயம் ஆழத் துளைக்கிறது
பூமியை.
கணம் கணமாய்க் குறைந்தாலும்
தலைமுறை தலைமுறையாய்க்
கழிகிறது காலம்.
யாரேனுமொருவர்
உரக்க எதைச் சொன்னாலும்
அதை உண்மையென்று நம்பிடும் நாடிது.
கவனம் சிதறிப் பிசகினாலும்
திசைமாறி
மாற்று வழிப் பயணத்தை
என்றும் தொடர்வதில்லை
ஆதவன்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.