சோக்கிரட்டிஸின் இறுதிப் பயணம்.
உங்கள் மனதில் பதிந்துள்ளதா?
சோக்கிரடிஸின் இறுதிப் பயணம்.
என் அறிவுக்கு எட்டியவரை
ஆராயந்தெடுத்த சொற்கள் கொண்டு
இயற்றுகிறேன் ஓர் கவிதை
சொப்ரோனிக்கஸ் மகனுக்காய்.
சிற்பியின் மகனாய்,
மெய்யியலின் செல்வமாய்
கிரேக்ககாலமதில் உதித்தார்
சோக்கிரட்டிஸ்.
செயல்களில் துணிவும்,
குணத்திலே நேர்மையும் கொண்ட
ஒரு மாமனிதர்.
உருவத் தோற்றம்
குள்ளமாய் பருத்தசரீரம்
விநோதமாய் இருந்ததுவோ?
எள்ளி நகையாடினர்
எத்தனையோ பலர்.
இருபது வயதினில்
சிந்தனைப் பணியை
எதேன்ஸில் தொடங்கினார்.
சிந்தனையின் வாகனமாய்
கல்வியூட்டும் அணுகுமுறையாய்
அவர் கையாண்டது
உரையாடல் முறைதனை.
கடவுள் கொள்கை
புதிதாய் அமைத்தார் என்றும்,
இளைஞர் மனதைக்
கெடுத்தார் என்றும்
குற்றம் பலதொடுத்தார்.
அரசமுறைப்பாட்டாளர் மிலட்டஸ் அவர்களும்.
இருண்டகற்களாய்
சூரியனும் சந்திரனும்
இது சோக்கிரட்டிஸின் வாதம் என
குறையும் கூறினார்.
நாஸ்திகன் எனவும்
பொய்ப்பட்டம் வழங்கினார்.
அரசியல் சதிகளினால்
அரங்கேறிய நீதிமன்றம்
செவி சாய்க்கவில்லை
உண்மையின் பக்கம்.
பொய் குற்றங்கள் தனைஏற்றுவிட
சோக்கிரட்டிஸ் என்ன
குற்றவாளியா?
தன் சார்ந்த உண்மைகளை
தலைக்கணம் பிடித்தவர்க்காய்
எடுத்துரைத்தார் அவைதனில்.
இருப்புடையஒரு பொருளை
இல்லையென்று கூறிவிட
இவ் உலகினில் யாருமுண்டா?
வினாவுகிறார் சோக்கிரட்டிஸ்
நீதிமன்றம் முன்னிலையில்.
தெளிவாக ஓர் பதில்
“இல்லை”என்று
மிலட்டசும் கூறுகிறார்.
ஆதாரம் இதுவல்லவோ
நான் நாஸ்திகன் அல்ல என்பதற்கே
உறுதியாய் கூறுகிறார்
சோக்கிரட்டிஸ் அவர்களுமே
உண்மைகள் புதைக்கப்படுகிறது.
பொய்யுரைகள் ஏற்கப்படுகிறது.
ஜீரி சபை வாக்குகளில் அதிகம்
சோக்கிரட்டிஸிக்கு எதிராய்
வீசப்படுகிறது.
குறைந்தபட்ச தண்டனை
பெற்றுவிட வாய்ப்பிருந்தும்
விரும்பவில்லைஅவரும்
அந்நிலைப்பாடுதனையும்.
நான் குற்றவாளி இல்லையே
நான் சுற்றவாளிதான்.
உறுதியாய் உண்மை உரைத்த
அக்குரல்
ஒடுக்கப்பட்டது.
அரசியல் சூழ்ச்சியினால்.
மிலட்டஸின் குற்றச்சாட்டு
முறையாக இல்லையெனினும்
சூழ்ச்சிகள் பலவும்
சோக்கிரட்டிஸை
குற்றவாளியாய் ஆக்கியது.
ஆதி கிரேக்க காலம் முதல்
கருத்து பல மொழியப்பட்டது
கடவுள் கொள்கைக்காய்.
தண்டனை வழங்குவதெனில்
அன்று அங்கேயே
வழங்கப்பட்டிருக்கலாமே.
ஏன்? இன்று மட்டும்
கிரேக்கக் காலமதில்
சோக்கிரட்டிஸிக்காய்
இந்த நிலைமை.
முப்பது நாட்களில்
மரண தண்டனையை
உத்தரவிடுகிறது ஜீரி சபை.
சோக்கிரட்டிசம்
மரணம் சார் போதனையை
அழகாய்க் கூறிவிட்டு
ஏற்கிறார் மரணத்தை
பயமேதுமின்றி.
குடியாட்சிக்குத் தலை சாய்க்காமல்
குற்றங்களைச் சுட்டிக் காட்டியவர்.
விமர்சனம் பல தொடுத்தார்
அக்கால அரசியல் தலைவர்களுக்காய்.
இறுதிப்பயணம் வேகமாய்ச் சென்றது
சோக்கிரட்டிசின்
மரணப் பாதைவழியே.
சிறையில் அடைபட்டார்.
சிந்தனையாளர் சோக்கிரட்டிஸ்.
தப்பிக்க வழியிருந்தும்
அவர் தவறிழைக்கவில்லை.
நாட்டின் பற்றை
நிலைநாட்டவே
மரணத்தையும்
தழுவிடத் துணிந்தார்.
முப்பது நாட்கள்
உறவகளைப் பிரிந்து
கூண்டுக்கிளி போல்
சிறை வசித்தார்.
கடவுள் அப்பலோவின் திருவிழா
அவருக்கான மரணத்ததை
நீடித்தது.
அன்று பயணத்தின் இறுதிநாள்.
சிறைவாசல் சோகமாய்
சொல்லொண்ணாத் துயரத்துடன்.
மனைவி, மக்கள், நண்பர்கள்
கண்ணீர் மல்கக்
கதறுகின்றனர்.
சோக்கிரட்டிஸ்
இறுதி நாளில்
ஸ்நானம் செய்து வந்தார்
விஷப் பானம்
அருந்துவதற்காய்.
நெஞ்சில் உருக்கத்துடன்
மனைவி, மக்கள்
சோக்கிரட்டிசின் முன்
வரவழைக்கப்பட்டனர்.
பார்வையில் ஓர் பரிதாபம்.
சிந்தனையாளன் எதுவுமே
பேசவில்லை.
திருப்பி அனுப்பி விட்டார்
மனைவி, மக்களை.
அது இறுதி நேரம்
தயாரானது விஷப் பானம்.
இரவாகவில்லையே
பானம் அருந்த
சற்று பொறுக்கலாமே என்றார்
சீடன் கிரிட்டோ.
அருந்துவது விஷப் பானம்.
எப்போதுஅருந்தினால் என்ன?
எடுத்து வாருங்கள் அதனை
நான் விடைபெற்றுச் செல்லவென்றார்.
பானமும் வந்தது.
புன் புறுவல் பூத்து
விருப்புடன் அதை வாங்கி
பருகினார் லாவகமாய்.
கிரிட்டோ கதறுகிறார்
சிந்தனையாளன்
பிரியும் நேரமதில்.
அழுகின்ற ஓலம்
அமைதியான மரணத்தை
அழிக்காது என்றல்லவா
அனுப்பி விட்டார்
அவர் மனைவி, மக்களை.
உடல் பூராய் விஷம்
ஏறிவிட்ட நிலைதனில்
அவர் பாதங்கள் இரண்டும்
நிலை தடுமாறின.
சோக்கிரட்டிஸ்
சாய்ந்து வீழ்கிறார்.
பூமித் தாயவள் மடி மீது.
நா தடுமாறியது.
வார்த்தைகள் ஏதோ
மெதுவாய் ஒலித்தன.
“கிரிட்டோ”-என்று
ஓர் ஒலி தலைசாய்த்தான் சீடனும்.
அண்டை வீட்டுக்காரனிடம்
கடனாய் பெற்றேன் ஓர் கோழி
அடைக்க முடியவில்லை
அக் கடனை.
நீயும் திருப்பிஅழிப்பாயோ?
இல்லை மறந்துபோவாயோ?
சீடன் வாயில் ஓர் வார்த்தை
உடனே அழிப்பேன்
அக்கடனை என்று.
இன்னும் ஏதுமுண்டா?
கிரிட்டோ வினவுகிறார்.
விடையளிக்கப் பதிலுண்டோ?
சோக்கிரட்டிசின் உள்ளமதில்.
இறுதி மூச்சில்
என்ன நினைத்தாரோ?
நா விடையளிக்க எழவில்லை.
உயிர் துறந்தது.
உடலினை விட்டு.
கிரிட்டோகண்களை மூடிவிடுகிறார்.
என்ன செய்வதென அறியாதவராய்.
மரண ஓலம்.
அன்று கிரேக்கம் முழுவதும்.
அழுதாலும் என்ன பயன்?
போன உயிர்
மீண்டு வருமோ?.
உயிர் பிரியும்
இறுதி நேரம்
ஒழுக்கவாதியாய்
உயிர் துறந்தார்.
அவரைப் போல் சிந்தனையாளன்
இன்னும் இப்புவி மீது
பிறக்கவில்லை.
வரலாற்றில் ஓர் சான்றாய்
அவர் இன்று வரை நிலைத்திருக்கிறார்.
புவி என்ற ஒன்று
புறம் நீங்கிப் போகும் வரை
வரலாற்றில் என்றும்
அழியாது
அவர் நாமம்.
- வினாயகமூர்த்தி வசந்தா, வந்தாறுமூலை, இலங்கை..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.