அனைவருக்கும் கல்வி
எட்டாத கனியாக ஏழை யர்க்கே
ஏற்றமிகு கல்வியிங்கே ஆன தின்று
திட்டமிட்டே அரசியலார் ஆட்சி யாளர்
திருவான கல்விதனை வணிகம் செய்தார் !
தட்டேந்தி கோயில்முன் பிச்சை கேட்கும்
தரித்திரராய்ப் பள்ளியின்முன் ஏழைப் பிள்ளை!
கட்டாயக் கல்வியெனும் சட்ட மெல்லாம்
கறிக்குதவா ஏட்டிலுள்ள சுரையின் காயாம்!
திண்ணைணிலே அமர்ந்தாசான் கல்வி தன்னைத்
தித்திக்க இலவசமாய் அன்று தந்தார்
கண்ணாகும் கல்வியென்றே காம ராசர்
கடைக்கோடி ஊரினிலும் தொடக்கப் பள்ளி
நண்பகலில் உணவளித்துக் கற்ப தற்கு
நாடெல்லாம் இலவசமாய்த் துவக்கிவைத்தார்
மண்ணாளும் அரசின்றோ தனியார்க் கீந்தே
மணற்கொள்ளை போல்கல்வி ஆக்கி விட்டார் !
அரசாங்கம் நடத்துகின்ற பள்ளி யெல்லாம்
அரைகுறைதாம் நற்கல்வி கிடைப்ப தில்லை!
தரமான கல்வியெனில் தனியார் பள்ளி
தனைத்தேடிப் போவதற்குக் காசு வேண்டும்
இரவலராய் வீதியிலே நிற்க வைத்தார்
இந்நாட்டின் வருங்கால மன்னர் தம்மை
கரமிணைந்தே மக்கள்தாம் எழுந்து வந்தால்
கல்வியிங்கே அனைவர்க்கும் கிடைக்கும் நன்றாய்!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.