தமிழன்டா…! நாங்க தமிழண்டா...!!

அகரத்தின் ஆணிவேராய்த் தமிழன்னையின் உதிரத்தில் உதித்தோம்
தமிழனின் பழமை எல்லாம் புதுப்பிக்கவே வளர்கின்றோம்
பாரம்பரிய வீரத்தினையும் காதலையும் இருவிழிகளென்றோம்
விழுப்புண் படாத நாளெல்லாம் வீண் என்றோம்
யாதும் ஊரே யாவரும் கேளிர் பறைசாற்றிய புலவனோடு
உலகை ஆண்டும் ஆணவம் இல்லாமல் வலம் வருகின்றோம்
மனிதனோடு மனிதனாய் வாழவே விரும்புகின்றோம்
தரணியைத் தாரை வார்க்கும் எண்ணமில்லாத தமிழர்களாம்
மஞ்சுவிரட்டில் தடையைக் கடந்து அதை உடைத்தெறிந்தோம்
அடிமையைத் தகர்த்தெறிந்து உலகையே ஆளப்போகின்றோம்
உரிமைக்குரல் கொடுத்த இளைஞா்களாய் ஒன்றிணைந்தோம்
அதிகாரத்தின் திமிரையும் நடுநடுங்க வைத்தக் கூட்டமானோம்
அறிவின் ஆரம்பமாய் அடியெடுத்த முதல் இன மென்றோம்.
கலையும் கலாச்சாரத்தையும் கண்ணிமைக்குள் மீட்டெடுக்கின்றோம்
வறுமையில் செம்மையாக வாழ்ந்த கலைஞர்களானோம்
கொடுப்பதில் இல்லையெனச் சொல்லாத வள்ளல்களானோம்
ஆகாயத்தில் உலாவுகின்ற கோள்களின் அறிவியல் கண்டெடுத்தோம்
இயற்கையை முறைப்படுத்தியே இலக்கண இலக்கியம் இயம்பினோம்
அறிவை ஆராய்ந்த அரசப் புலவவர்களின் வம்சமானோம்
எதிரியையும் மன்னித்து வாழ்வளிக்கும் குணம் கொண்டோம்
துரோகியைத் துச்சமென நினைத்து நாணம் அடையச்செய்தோம்
அகிலத்தை மீட்டெடுக்கிறோம் அன்பினால் ஆளப்போகிறோம்
- சி. இரகு, திருச்சிராப்பள்ளி

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.