துடித்துத் துடித்து...!

கிழக்குச் சுவர்க் கடிகாரம்
என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
நேரம்
நேரம் துடித்துக் கொண்டிருப்பது
யாருக்காக?
எல்லாம் எனக்காகத்தான்.
என் வீட்டை நோக்கி வரும்
அந்த
யாரோ ஒருவனுக்காகவும் கூட.
உரக்கப் பேசிக்கொள்கிற
பெரிய முள் சிறிய முள்ளிடம்
வினவியபடி
காலத்தை மெல்ல அளந்து கொண்டிருக்கிறது.
நொடிகள் துடிப்பை
என் துடிப்பை
அவற்றின் பேச்சுக்களிடையே
என்னால் கேட்க முடிகிறது.
தினச்சூரியன்
என் அறையில் அம்புகளை எய்தான்
கழிந்தோடும்
நேரத்தை சுடர்விட்டெரிக்கும்படி கட்டளையிட்டான்.
பெரிய முள் சிறிய முள்ளிடம்
வினவியபடி
இப்போது ஓடத்தொடங்கியிருந்தது.
நான் விழித்துக் கொண்டிருக்கின்றேன்
நேரம்
பத்துப் பத்து
நான் நேரத்திற்கீடாக
என் பாதங்களை
பறவையின் கால்களைப் போல
மாற்றியமைத்துக் கொள்ளவேண்டுமா?
ஒரு அசரீரி
யாருமல்ல
பத்துப் பத்து நொடிதான்
காலத்தை
அளந்து அளந்து
உன் வாழ்வில் நீ சாதித்தது என்ன?
படீலென இடிமுழக்கம் போல
மின்னிச் சட்டென மறைந்தது.
நேரம் பத்துப் பத்து...
நேரம் பத்துப் பத்து நொடிகள்
துடித்துத் துடித்துத் துடித்து...
மெல்ல மெல்ல
கடிகாரத்தில்
பெரிய முள் சிறிய முள்கள்
வீண் அலங்காரமெனத் தோன்றியது
இப்போது
என் கடிகாரத்தில் இருந்து
அவற்றைப் பிடுங்கியெறிந்து விட்டேன்.
விழித்துக் கொண்டவன்
நான் மட்டுமே!
நேரம் பத்துப் பத்துப் பத்து நொடிகள்
துடித்துத்... துடித்து... துடித்து...!
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.