பெண்ணாய்ப் பிறக்க...!

மாதவம் செய்தனை
பெண்ணாய்ப் பிறக்க
இருக்கின்ற விலங்குகளையெல்லாம்
உடலில் பூட்டிக்கொண்டு
பெண்விடுதலை அடைந்தனை
என்று பூரிக்கிறாய் பெண்ணே...
விட்டுவெளியில் வரவியலாமலே
கட்டுகளைச் சுமந்துகொண்டே
களிப்பாய்ச் சொல்கிறாய்...
மாதவம் செய்ததே
பெண்ணாய்ப் பிறக்க!
*****
உடம்பினால் மட்டுமல்ல,
மனதினாலும்
பெண்ணாகவே இருக்கிறாய்...
ஒருபோதும் நீ
மனுஷியாக
நடத்தப்படுவதேயில்லை.
*****
எத்தனை உயரங்கள்
அடைந்தால்தான் என்ன...
எவரெஸ்ட் உச்சியில்
வெற்றிக்கொடி நட்டால் என்ன...
விண்வெளியில் பறந்தால் என்ன...
விண்கலம் செலுத்தினால் என்ன...
அணுவைத் துளைத்தால் என்ன...
அற்புதம் விளைத்தால் என்ன...
அத்தனையும் கடந்து போகும்
அல்லது கடத்திப் போகும்
அந்த ஒற்றைச் சொல்...
என்ன இருந்தாலும்...
நீ பொம்பள தானே...
*****
பூணும் உடைகளிலல்ல...
பேணும் நாகரிகத்திலல்ல...
காணும் பார்வையிலல்ல...
உன் பெண் விடுதலை...
மனதால் மனுஷியென
மாறாத மனதுடன்
நிறைவோடு சமமாய்
நினைக்குங் காலந்தான்
பெண்விடுதலைக் காலம்.
*****
அடுக்களையிலிருந்து
வெளிவந்ததாலேயே
கிடைத்துவிடாது விடுதலை.
படிப்பினில் தேர்வுறுவதாலேயே
படிந்துவிடாது பெண்விடுதலை.
மனக்கருத்து வெளியிடத்
துணிவிலாமலேயே
வாழும் வாழ்வில் மிஞ்சுவது
அடிமைத்தளையன்றி வேறேது!
*****
மாதம் மூன்றுநாள் வலி,
மணத்திற்குப் பின்
ஆணைச்சுமக்கும் வலி,
அதன்பின்னே பேறுகாலப்
பிரசவ வலி,
பெண்ணாய்ப் பிறந்தால்...
ஆணுக்கென்று அடுத்தடுத்த வலி,
பிள்ளைக்கலி தீராதெனில்
சொற்கற்களால் அடிபடும் வலி,
வாழ்வின் பிறப்பு முதல்
வலிகளாலேயே சூழுமோர் உலகம்
வாய்த்ததற்கு யார் காரணம்!
*****
எல்லா வித்தைகள் அறிந்திருந்தும்
எதையும் வெளிக்காட்டாமல்
அத்தனை வித்தைகளையும்
ஆழப்புதைக்கும் ஒரு சொல்...
... சும்மாயிரு ...
உனக்கு ஒண்ணும் தெரியாது...!
*****
மனைக்கு விளக்காய் வந்தவள்
மனைவிளக்கின் அடியில் இருக்கும்
இருளிலேயே வைக்கப்பட்டிருக்கிறாள்.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.