உள்ளதே போதும் உணர்!
செல்வங்கள் எத்தனை சேர்ந்தாலும் வாழ்வினிலே
செல்லுங்கால் கூடவருஞ் செல்வமல்ல... நல்லவினை
கொள்ளையெனக் கொண்டாலும் கூடவரும் புண்ணியத்தால்
உள்ளதே போதும் உணர்.
பிறந்திடும் போது பெருஞ்செல்வம் இல்லை
இறந்திடும் போதும் இருப்பதில்லை... உறவெனவே
உள்ளதெலாம் நாம்செய்த நன்மைகளே உண்மையெனில்
உள்ளதே போதும் உணர்.
போதுமெனச் சொல்கின்ற பொன்மனமே நற்செல்வம்
தீதுநமை எப்போதும் தீண்டாதாம் ... ஆதலினால்
கள்ளப் பணத்தைக் கணக்கின்றிச் சேர்க்காமல்
உள்ளதே போதும் உணர்.
தெள்ளத் தெளிவாகத் தேர்ந்திடுவீர் எப்போதும்
கொள்ளையெனச் செல்வத்தைக் கூட்டாதீர்... வெள்ளையென
உள்ள பணமதுவே உண்மை எனவறிய
உள்ளதே போதும் உணர்.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.