இளவல் ஹரிஹரன் ’ஹைக்கூ’க்கள்

கடந்த கால பாடத்தை
நினைவுபடுத்துகிறது மீண்டும்
பெய்யும் கனமழை
*****
எவ்வளவு முயன்றும்
கற்க முடிவதில்லை
இயற்கை பாடம்
*****
பசித்த வயிற்றுடன்
ரசித்துப் பார்க்கிறான்
சிலந்திவலை
*****
மேய்ந்த பசு
அசைபோடுகிறது
கவர்ச்சிச் சுவரொட்டி
*****
அமர்ந்திருக்கும் புத்தனைவிட
அழகாய் இருக்கிறது
புத்தனின் நிழல்
*****
நகரும் ஒளியில்
மெள்ள நகர்கிறது
புத்தனின் உருவம்
*****
வெட்டப்படும் போதிமரம்
வீழ்கிறது போதித்தபடி
புத்த ஞானம்
*****
பறக்கும் பறவை
களைத்துப் போகிறது
நிழல் தேடி
*****
வெட்டப்பட்ட மரம்
தினமும் கதறுகிறது
கிரீச்சிடும் வீட்டுக்கதவுகள்
*****
வீடெங்கும் பரவிநிற்கும்
தாத்தாவின் வாசம்
சொல்லப்படாத கதைகள்
*****
இலவசம் பழகிய மக்கள்
இலவசமாய் அளிப்பதில்லை
வாக்குரிமைகள்
*****
முற்றுமாய் வளர்ந்து
நிற்கிறது வீட்டுமாடி
மாடிவீட்டுத் தோட்டம்
*****
கனவுகளுடன் செல்பவன்
கண்முழித்தபடி இருக்கிறான்
தூக்கம் வராமல்
*****
பாதைகளை அடைத்தவன்
பரிதவித்துப் போகிறான்
மழை வெள்ளம்
*****
வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்
ரசிக்க வைக்கிறது
புதிதாய்ப் பிறந்த ஹைக்கூ.
*****
அடிமாட்டு விலைக்கு வாங்கும்
பழைய புத்தக வியாபாரி
கொண்டாடும் உலக புத்தக தினம்.
*****
கட்டிமுடியும் வீடு
கலைந்து போகிறது
பங்காளிச் சண்டை.
*****
எரியும் தீபத்தின் அடியில்
எப்போதும் இருக்கிறது
சிறு இருள்
*****
ஒரே கடவுள்
மாறுபடும் தரிசனம்
வேறு வேறு கட்டணங்கள்
*****
இனிப்புப் பலகாரம்
இனிக்கவே இல்லை
விரல்களில் கந்தக வாசம்
*****
ஊர் கூடித்
தேர் இழுத்தும்
தொலைவில் சேரி
*****
தீபாவளி நாள்
நிம்மதியாய் உறங்கும்
சிவகாசிச் சிறுவன்
*****
பெற்றோர் நலம்
பேணுவதில் முன்னேற்றம்
பெருகும் முதியோர் இல்லங்கள்.
*****
விழுகின்ற விதை
ஆலமோ அரசோ
அறியாது காக்கை எச்சம்.
*****
எதிர்காலம் சொல்லும்
சீட்டுகளில் தெரிவதில்லை
கிளிசோதிடக்காரன் வறுமை
*****
குளம் நேற்று
குப்பைமேடு இன்று
அரசு அலுவலகம் நாளை
*****
ஒற்றை இலை நிழலில்
ஓய்வெடுக்கும் ஒதுங்கி
கறுப்பு எறும்புகள்
*****
ஆணியில் தொங்கும்
சந்தனமாலை
அறிவிக்கும் ஓய்வு
*****
தாழிக்கும் மணம்நுகர்ந்து
பசியாற்றிக் கொள்ளும்
அடுக்களையில் அம்மா
*****
பாரவண்டி இழுப்பவன்
பசியாறும் இடம்
தண்ணீர்ப் பந்தல்
*****
ஏழையின் கௌரவம்
எருக்கமலர் மாலை
சூடிக்கொள்ளும் பிள்ளையார்
*****
உதிரும் இலையோடு
உதிர்ந்து விழுந்தது
உயிரற்ற பட்டாம்பூச்சி
*****
எச்சமிட்டபடி பறவைகள்
பறந்து செல்லும்
வருந்தலைமுறைக்காக
*****
பாத்திரம் நிறைய
பால் கறக்கிறது
கன்றின் நினைவுகள்
*****
வேட்டையாடும் விழிகள்
விலகிநிற்கும் புத்தன்
வெட்டப்படும் போதிமரம்
*****
பெட்டியில் நிறைந்திருக்கும்
அவள் நினைவுகள்
காதல் கடிதங்கள்
*****
நின்ற இடம் நிற்கிறது
பெயர்பதிந்த மரம்
கண்களில் ஈரம்
*****
நகர்த்திக்கொண்டே
செல்கிறது காலம்
துடிக்கும் கடிகாரம்
*****
நல்ல பொழுதுகள்
வீணாகி விடுகின்றன
முகநூல் பார்வைகள்
*****
கிளிஞ்சல் பொறுக்கியபடி
பாடம் கற்கிறான்
மணல்மேல் எழுத்துகள்
*****
சுகம் காண்கின்றன
காதலர் குடைகள்
சுட்டெரிக்கும் வெயில்
*****
சேர்ந்தே காய்கிறது
ஒட்டிய வயிறு ஒருபாடு பசி
வெயிலில் மீன்வலை
*****
கூவிக்கூவி விற்கிறாள்
மீன் அங்காடியில்
பூக்காரக்கிழவி
*****
கருங்கற் சுவற்றில்
வளர்ந்து கொண்டிருக்கும்
காக எச்ச அரசு
*****
சந்தனப் பொட்டிட்டுச்
சாமி கும்பிடுகிறான்
மீன் கடைக்காரன்
*****
மயானம் நோக்கி
மறைவாய் இருக்கிறது
மதுக்கடை ஒன்று
*****
அசை போடுகிறது
முதுமைக் காலம்
முதல் முத்தம்
*****
மகளிடமிருந்து தாவும்
தந்தையிடம்
பறக்கும் முத்தம்
*****
பறக்கும் முத்தத்தில்
கரைந்து விடுகின்றன
தந்தையின் கவலைகள்
*****
அலைந்துகொண்டே இருக்கும்
கூடுகட்ட மரமின்றி
தூக்கணாங்குருவி
*****
இழுத்து இழுத்து
போர்த்திக்கொள்ள
துளைக்கும் மேஸ்திரி கண்கள்
*****
வறண்டுகிடக்கும் ஆறு
வாய்க்கால்வழிப் பாயும்
அணிற்பிள்ளை
*****
கடந்து போகும்
மாட்டுப்பொங்கல்
அடிமாடுகளுடன் லாரி
*****
பொங்குகின்றன
வெறும் பானைகள்
விவசாயிகள் கண்ணீர்
*****
உழுதவன் கணக்கு
உடனே தெரிகிறது
விவசாயி தற்கொலை
*****
கருவாட்டுக் கூடைக்காரி
மணக்க மணக்கச் செல்கிறாள்
தலைநிறை மல்லிகைப்பூ
*****
அரைபட்டுக் கொண்டிருக்கும்
கிழவியின் வெற்றிலை உரல்
ஊர்வம்புக் கதைகள்
*****
வெயிலில் காய்கிறது
வினைதீர்க்கும் பிள்ளையார்
வெட்டப்பட்ட அரசு
*****
மரத்தை வெட்டிவிட்டுப்
பெயர்மாற்றும் பக்தர்
வெயிலுகந்த பிள்ளையார்
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.