இயற்கையின் சிரிப்பு
மனங்களை கடந்து வெகுதூரம்
முன்னேறியாகி விட்டது...
நியாயம் தர்மம் இவை
விதவிதமாய் மனம்
கற்பித்துக் கொண்டதாய்
பாடத்திட்டம் வடிவமைத்தாகி
விட்டது...
புறாக்கறிக் கீடாக சதையும்
கன்றிற்கீடாக மகனைத்
தேர்க்காலிட்டதும் மூடநம்பிக்கையென
முரசறிவித்து விடலாம்...
அடுத்து என்ன?
அதிகாரம் உள்ளவரிடத்தே
அரசாங்கத்தை ஒப்படைத்து
விடலாம்...
முடிந்தால் சூரியனை மேற்கில்
உதிக்கவும்...
நிலவைத் தேயாமலிருக்கவும்
கிளிகளைப் பாடவும்
குயில்களை ஊமையாக்கவும்
முயற்சித்துப் பார்க்கலாம்...
அறிவுஜீவிகளென அவரவர்
பட்டம் சூட்டிக்கொள்ள...
இயற்கை
சிரித்துக் கொண்டிருக்கிறது...!
- மதுரா, தஞ்சாவூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.