நட்பு முகங்கள்
என்ன உலகமடா ! இது என்ன உலகமடா !
உறவின் விளிம்பில் உலகின் ஊசல் !
எந்திர உலகின் எந்திர மனிதர்கள் !
உணர்வே இல்லா நட்பின் முகங்கள் !
முகங்கள் மட்டுமா ? மனங்களும் எந்திரமாய் !
ஒரு முகம் முன்னே அழகாய்ச் சிரிக்கும்!
ஒரு முகம் பின்னே ஆழக் குழி தோண்டும்!
இளகிய மனமோ இடையே தவிக்கும்!
இருதலைக் கொள்ளி எறும்பாய்த் துடிக்கும்!
முகத்தின் எதிரே ஊனையும் உருக்கும் அற்புதச் சிரிப்பு !
முதுகுக்குப் பின்னே முரண்படும் உயிர்ப்பு !
இதுவே இன்றைய உலகின் நட்பு !
என்ன உலகமடா ! இது என்ன உலகமடா !
நட்பு உறவின் விளிம்பில் உலகே ஊசல் !
முன்னே நின்றால் முட்டித் தள்ளும் !
பின்னே நின்றால் பிராண்டி வீசும் !
கீழே விழுந்தால் ஏறி மிதிக்கும் !
துஷ்டன் என்றே தூரப் போனால்
துள்ளிக் குதித்தே தொடர்ந்து வந்து
தொலையும் வரையும் தொல்லை கொடுக்கும் !
இதுவே இன்றைய உலகின் நட்பு !
என்ன உலகமடா ! இது என்ன உலகமடா !
உறவின் விளிம்பில் உலகின் ஊசல் !
- ச. பர்வதா, பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 2.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.