புத்தாண்டே வருக...!
எங்கும் இன்பம் நிறைந்து பெருகிட
எங்கள் புவியில் அமைதி நிலவிட
எல்லா இடத்தும் மக்கள் களித்திட
எய்ப்பே இல்லா உலகம் படைத்திட
இதயம் நிறைந்த இனிய புத்தாண்டே
இனிதாய் நீயே வருக வருக!
இல்லை எனும் சொல் இல்லாதாகுக
இனிமை பலவே இனிதே நிறைக
இனிதாய் உழைக்கும் மக்கள் வாழ்ந்திட
இளமை நிறைந்த இனிய புத்தாண்டே
இளமையாய் என்றும் வருக வருக!
கள்ளம் இல்லா உலகம் படைத்திட
கடுமை நிறைந்த கவலைகள் நீங்கிட
கனவுகளெல்லாம் நனவுகளாகிட
கனிச்சுவை நிறைந்த இனிய புத்தாண்டே
இனிமை பொங்கிட இனிதாய் வருக!
தன்னலங் கொண்டோர் தரணிவிட்டோட
தன்னிகரற்ற தலைவர்களோங்க
தளர்வுறு மனத்தோர் தரணியில் உயர்ந்திட
தாளா தளிராய் தண்ணொளியாய் வருக
தரமிக இளமை இனிமை புத்தாண்டே!
புதிய புத்தாண்டில் பொலிவே பெறுக
புதியது படைத்துப் புதுமையாய் ஒளிர்க
பழையது ஒழிய பன்னலம் பெறுக
புத்தாண்டில் யாவரும் சீருடன் வாழ்கவே!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.