மார்கழிப் பூக்கள்
வீதிகளில் வீடுகள் தோறும்
வாசலில் பூத்திருந்தன
மார்கழிப்பூக்கள்...
விடிகாலைவேளை
ஆண்டாள் பாதங்கள்
கோலத்தில் மிதிபடக்
காத்திருந்தன
புள்ளிகளும் கோலங்களும்.
அத்தனைப் பூக்களும்
அரங்கனை அலங்கரிக்க
அவாவுடன்
அதிகாலைப் பனியில் பூத்து
நடுநடுங்கிக் கொண்டிருந்தன.
கோலத்தின் நடுவே
சாண உருண்டையில்
கம்பீரமாய் முகம்மலரும்
பூசணிப்பூவிற்கு
நிகராமோ மற்றைப் பூக்கள்.
தைவரவை எதிர்நோக்கி
மார்கழி நடக்க,
கோலத்தைச் சுற்றிவரும்
அத்தை மகள்களின்
அழகுவளைக் கரம்பிடிக்க
சுற்றிவரும்
முறைமாமன்கள் கண்டு...
முகத்தில் பூக்கும்
வெட்கப் பூக்கள்
புன்னகைப் பூக்கள்
கன்னத்தில் மின்னும்
சிவப்புப் பூக்கள்
கைகளில் மலரும்
காந்தள் பூக்கள்
கண்களில் விரியும்
காந்திப் பூக்கள்
அத்தனையும் அங்கே
ஆலயமணி எதிரொலிக்கும்
ஓசைப்பூக்கள் நடுவே
உரக்கக் கேட்கும்
பிரார்த்தனைப் பூக்கள்..
அடடா.....இவையன்றோ
அழகு மார்கழிப் பூக்கள்....!
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.