பொங்கல் பாட்டு

பொங்கலுன்னா பொங்கல் - இது
 எங்களோட பொங்கல்
ஒன்னாச் சேந்து பொங்கணும் - வெல்ல
 ஆயாங்குல உருண்டை திங்கணும்
ஒன்னா மாடு கட்டணும் - அன்பு
  ஒவ்வொருத்தர் மனசிலும் ஒட்டணும்
                   (பொங்கலுன்னா)
வெள்ளெனப் போனோம் வயலுக்கு - தண்ணீர்
 பாச்சி உழு தோமே வயிறுக்கு
வில்லென நடந்தன மாடுகள் - வயலில்
 வரைந்தன கலப்பையின் கோடுகள்
நெல்லென விதைத்தோம் பயிருக்கு - இடையில்
 களைவளந் ததுவே பயிருக்குள்
எள்ளெனப் போட்டோம் உரத்தினை - மன்னர்
 முண்டாசு உயர்த்தினோம் சிரத்தினை
                   (பொங்கலுன்னா)
கருகரு கருவென வளந்தது - பயிரில்
  களைஎடுத் தேகால் அளந்தது
விறுவிறு விறுவெனக் குலைதள்ளி - முத்து
  விளைத்தது போலவே அலைதள்ளி
நறுநறு நறுமணம் வீசுமே - அறுத்து
  நடக்கையில் வயலுமே பேசுமே
துறுதுறு துறுவென வாண்டுகள் - கதிர்த்
  தாள்களைப் பொறுக்கியே தாண்டுங்கள்
                   (பொங்கலுன்னா)
களத்திலே கட்டுக்கள் அடிபடும் - நெல்லு
 கவலையோ மகிழ்ச்சியோ துடிபடும்
நிலத்திலே விளைந்ததன் குவியலை - அளந்து
 முதன்முதல் மூட்டுவோம் அவியலை
உளத்திலே சித்திரம் வருகுதே - ஆலை
  உருளைக்குள் அரிசிதான் வருகுதே
பலத்திலே விளைந்தன நெல்மணி - எங்கள்
  பயனுக்குக் கிடைத்ததோ வெண்மணி !?
                   (பொங்கலுன்னா)
பொங்கலுன்னா பொங்கல் - இது
 எங்களோட பொங்கல்
பொங்கலுன்னா பொங்கல் - நாம்
 பொங்காவிட்டால் மங்கல்..??!!
- ஏழைதாசன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.