‘தமிழ் வாழ்க’வென்றே...!

இளமையிலே முதுமைவரும் இருமல் காசம்
 எல்லாமே சேர்ந்துவரும் உடல்சி தைந்த
உளமதிலே சோர்வுவரும் புற்றும் சேரும்
 ஒருகோலைக் கைக்கொண்டு மூன்று கால்கள்
தளர்வாக நடக்கின்ற நிலைமை யாகும்
 தயக்கமின்றிச் சொல்வேன்நான் தம்பி நீயும்
வளையமென வெண்வத்திப் புகைபி டித்தால்
 வாய்சுடுமே நுரையீரல் வெந்து போகும்.
புகைபிடித்தல் உடலுக்குக் கேடென் பாற்போல்
 புவியினிலே தமிழ்மொழியும் சிதையக் காண்பாய்
பகையெழுத்தால் வடவெழுத்தால் பாழாய்ப் போகும்
 பைந்தமிழை மெல்லயினி சாகக் காண்போம்
அகம்புறமாய் அமைந்ததமிழ் எழுத்தே யின்றி
 அமைந்ததுவா தமிழ்மொழியோ கேட்பாய் தம்பி
புகைவளையத் தோற்றமன்ன வடவெ ழுத்தோ
 புற்றெனவே சிறுச்சிறிதாய் தமிழொ ழிக்கும்
கண்ணிருந்தும் குருடரென வாழ லாமா
  கண்கொத்தி வடவெழுத்தால் தாழ லாமா
மண்ணிருக்கும் மொழிகளின்தாய் மொழியா கத்தான்
  மாத்தமிழை எண்ணுகிறார் மொழிக்குள் மூத்த
எண்ணெழுத்துக் கொண்டமொழி என்பார் இங்கே
 இலக்கியத்தின் பெட்டகமாய்க் காண்பார் நல்ல
பண்கொண்ட தமிழ்மொழியில் பூநா கம்போல்
  பகைகொண்ட வடவெழுத்தை யொழிப்போம் நாமே.
இன்றுமுதல் தூயதமிழ் எங்கும் பேசி
  இன்னமுதாய் உலகுக்கே எடுத்துச் சொல்வோம்
மன்னுபுகழ் தமிழ்மொழியை ஐ.நா. பேசும்
  மாமொழியாய் அரங்கினிலே முழங்க வைப்போம்
என்றுமுள தென்தமிழை வளர்ப்போம் என்றும்
  இயம்பியிசை கொள்வோமிச் சூளு ரைப்போம்
நன்றுவளர் தமிழதனை நாவி லேற்றி
  நயம்படவே உரைத்திடுவோம் வாழ்க வென்றே.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.