வஞ்சகத்தை வேரறுப்போம்!
கொலைகளவு சூதெனக் கொள்ளையிடுங் கும்பல்
நிலையாக ஆள நினைக்கும் - மலையெனவே
நெஞ்சத் துணிவுகொள் நேர்மைத் திறமுங்கொள்
வஞ்சகத்தை வேரறுப்போம் வா.
ஊழலாம் சாக்கடையிற் ஊறித் திளைத்திடவே
வாழ நினைக்கின்றார் வஞ்சகர் - ஆழமாய்
நெஞ்சில் அடிமை நினைப்பின் அரசியலின்
வஞ்சகத்தை வேரறுப்போம் வா.
நம்பிக்கை மோசடி நட்புத் துரோகமும்
தம்வசங் கொண்டு தலைக்கனத்தால் - வம்பிழுத்து
நெஞ்சில் கபட நினைப்பினிலே வாழ்கின்றோர்
வஞ்சகத்தை வேரறுப்போம் வா.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.