கேட்காத ஓசை...!
சாதிச்சண்டை சத்தத்தில்
சாத்தப்பட்டு
சத்தமில்லாமல்போனது
சின்ன ஊர்க்கோவில்...
சாமிக்கே இல்லை பூசை,
எப்படிக் கேட்கும்
ஆலயமணி ஓசை...
மணிக்கூண்டும் மணியும்
மறைவிடமாகி
உறைவிடமாகியது பறவைகளுக்கு-
கூடு கட்டிக்
குடித்தனமும் ஆகிவிட்டது…
காலை மாலை
மணியோசை
கேட்ட இடத்தில்,
கேட்கிறது இப்போது
பறவைகள் பாடும்
பலகுரல் இசை...
பெரியவர் சிலரின்
பேச்சுவார்த்தையால்,
ஊருக்குள் வந்தது
ஒற்றுமை மீண்டும்...
கோவில் திறந்தது,
கேட்டது மணியோசை -
கேட்கவில்லை பறவையோசை...!
- செண்பக ஜெகதீசன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.