வெற்றி முரசு
ஆயிரமாய் உயிர்களினைப் பலியா யிட்டும்
ஆறெனவே குருதியினை ஓட விட்டும்
பாயிரமாய் வெற்றியெனும் முரசொ லிக்கப்
பகைவென்று கொடிநட்டார் மன்ன ரன்று !
கோயில்கள் சுவர்களிலே கல்வெட் டாகக்
கொத்திநல்மெய்க் கீர்த்தியாகக் குறித்து வைத்து
வாயில்கள் எனயிங்கே சரித்தி ரத்தை
வடிப்பதற்குச் சான்றாக விட்டுச் சென்றார் !
நாட்டைவிட்டு நாடுதனைப் பிடிப்ப தற்கு
நம்மவர்கள் படையெடுத்த காலம் மாறிக்
கோட்டையினைப் பிடித்தாட்சி புரிவ தற்குக்
கொள்கையற்ற கூட்டணியாய்க் கைகள் கோர்த்து !
வேட்டைக்குச் செல்கின்ற நாயைப் போன்று
வெறிபிடித்தே அலைகின்றார் பதவிக் காக
வெட்டுவைத்தே உடனிருப்போர் தம்மைச் சாய்த்து
வெற்றியென முரசுகொட்டி முழக்கு கின்றார் !
தன்னலத்தை வெல்லாமல் பொதுந லத்தின்
தலைவெட்டிச் சாதிகளின் கொடியை நட்டுப்
பொன்பொருளைக் கொள்ளையிட்டுச் சொத்தாய் சேர்த்துப்
பொலிகின்றார் வெற்றியெனும் முரசு கொட்டி !
புன்மைகளின் தேரோட்டம் வீதி செல்லப்
புறமுதுகைக் காட்டிநிற்கும் மக்க ளெல்லாம்
தன்நாடு எனநெஞ்சை நிமிர்த்தெ ழுந்தால்
தகுவாழ்வு எனும்வெற்றி முரசொ லிக்கும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.