மரண ஒப்பந்தம்!
செல்கின்றான் அவன்
செல்கிறான் உலகின் கோடிவரை
தன் சதைகளை மலையாய்ச் சுமந்து
உழன்று உழன்று செல்கிறான்
செவிகள் சோர்ந்தன - அவன்
செவிகள் சோரவிழுந்தனவோ?
இனிப்பைச் சலித்துத் தரும் - ஒரு
வேய்ங் குழலும் -அவனது
செவிகளை குலவுவதற்கு இல்லை
தோள்கள் - புல்லின் மீது
தொங்கவிடப்பட்ட சோலை பொம்மைகள்
வனாந்திரத்தின் புள்கள் அதன் மீது
வட்டமிடும்! -அவைகள்
பசியை வளர்த்து உணவை வேட்டையாடும்
ஓ! இந்த உலகமே
ஓ! இந்த உலகமே
உயிரைக் குடிக்கும் மிருகங்களே
வனாந்திரத்தில் பிறந்த இந்தச் சமூகமே
ஆயுதங்களையும் கொடும் ஆசைகளையும்
வீரிய உரம்வைத்து -அதன்
விடத்தை விற்பனை செய்யும் சூத்திர தாரிகளே
எதேச்சதிகாரம் செய்து பிணங்களை
பயிரிட்டு வளர்த்த - இவ்வுலகின்
“மரணத்தை விழுங்கும்” மிருகங்களே
உலகம் சுழன்று கொண்டிருக்கிறது
“மாற்றங்கள் ஓய்வதுமில்லை
மாண்டவர் மீள்வதுமில்லை” அறியீரோ
அவன் பிதற்றுகிறான்
போகிறான் போகட்டும்
எங்கே ஆயுதம் எடு
உன் வலியை சோதி - இதோ
என் வலிவும் வா
ஆக்கத்தின் தொடக்கம் அழிவு
இது நம்மிருவரின் ஒப்பந்தம்
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.