நலஞ் சொல்லருளும் நாரணனே!

கொண்டல்மலை சூழநிற்கும் வேங்கடவன்... ஒரு
குறையிலா திருப்பவனே வேங்கடவன்.
மண்டும்வினை தீர்த்தருளும் வேங்கடவன்... ஏழு
மாமலைமேல் நின்றருளும் வேங்கடவன்.
அண்டிவரும் அன்பருக்கு வேங்கடவன்... நலம்
அருளுகின்ற தெய்வமவன் வேங்கடவன்
வண்டமரும் மலர்சூடும் வேங்கடவன்... நமை
வைகுந்தம் அழைத்துச்செல்லும் வேங்கடவன்.
திருவடிகள் கைகாட்டி வேங்கடவன்... சரண்
சேர்வதற்கு வழிகாட்டும் வேங்கடவன்
கருவறையின் தாயெனவே வேங்கடவன்... தம்
கருணைமுகம் காட்டுகின்ற வேங்கடவன்.
அருட்சுரங்கம் ஆனதெய்வம் வேங்கடவன்... தினம்
ஆளுகின்ற தலைவனவன் வேங்கடவன்.
திருமகளைப் பிரியாமற் வேங்கடவன்... சேருந்
திருவருளால் உய்விக்கும் வேங்கடவன்.
எட்டெழுத்து மந்திரத்து வேங்கடவன்... நம்
ஏழேழு பிறவித்துணை வேங்கடவன்
கட்டிவைக்கும் பக்தியிலே வேங்கடவன்... உளங்
கட்டுப்படும் கடவுளவன் வேங்கடவன்
திட்டமிடல் மனிதரெனில் வேங்கடவன்... நல்ல
தீர்வருளி முடிப்பதுவோ வேங்கடவன்
கட்டமெனில் கைகொடுக்கும் வேங்கடவன்... இக்
கலியுகத்தின் கலிதீர்க்கும் வேங்கடவன்
ஆழ்வார்கள் அமுதமெனும் வேங்கடவன்... நால்
ஆயிரத்தில் அருளவரும் வேங்கடவன்
வாழ்வாங்கு வாழவைக்கும் வேங்கடவன்... உயர்
வைகுந்தம் சேர்த்தருளும் வேங்கடவன்
பாழ்வினைகள் படையழிக்கும் வேங்கடவன்... தம்
பரமபதம் தந்தருளும் வேங்கடவன்
சூழ்கலியின் இடரறுக்கும் வேங்கடவன்... நலஞ்
சொல்லருளும் நாரணனே வேங்கடவன்
படியேறி வருபவர்க்கு வேங்கடவன்... நம்
பக்கத்துணையாய் வருவான் வேங்கடவன்
முடியிறக்கும் பக்தருக்கு வேங்கடவன்... தம்
முகச்சோதி காட்டுகின்ற வேங்கடவன்
துடியான தெய்வமவன் வேங்கடவன்... உயர்
திருப்பதி மலைவாழும் வேங்கடவன்
செடியாய வினைதீர்க்கும் வேங்கடவன்... அன்புச்
சிந்தையிலே நிறைந்திருக்கும் வேங்கடவன்.
இளவல்ஹரி ஹரனவனின் கவிதையினை... தினம்
எடுத்தியம்பும் அன்பருக்கு வேங்கடவன்
வளமருள உறுதிகொண்ட வேங்கடவன்... தமை
வாழ்த்திநெஞ்சம் பல்லாண்டு கூறுமினே!
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.