அருஞ்சுவை ஆராவமுதன் வேங்கடவன்

அக்காரக் கனியென்னும் அற்புதனே வேங்கடவா
சிக்கெனவே திருவடியை தினம்பற்றிச் சிந்தையிலே
இக்கணமே நிறுத்திவுயர் ஏழுமலை மேலேறி
மிக்கசுடர் திருமுகத்தை மேன்மைகொளச் சேவிப்பேன்.
சேவிக்கத் துயரறுக்கும் சோதிமிகு திருவடிகள்
ஆவிக்குள் புகுந்துதினம் ஆனந்த மளித்திடுமே
பூவுக்குள் தேனிருக்க, பொன்வண்டாய்ப் பறந்தெனது
நாவுக்குள் இருக்கின்ற நாரணத்தேன் பருகிடுமே.
பருகுநீரும் பாற்சோறும் பால்திரட்டும் பரமனென
உருகிமனம் தினந்தோறும் உணர்வுடனே போற்றுகின்ற
பெருகுமன்புப் பெட்டகமாய் பிறவியதைப் பேறாக்கி
அருளுகின்ற வேங்கடவா அருஞ்சுவையா ராவமுதே.
ஆராவ முதமென்னும் அட்டாட்சர நாமமுடை
நாராய ணனேநவில நாலாயி ரந்தந்த
பேராயி ரங்கொண்ட பெருமானே வேங்கடவா
வாராது வந்தமணி வண்ணாகார் நிறத்தோனே.
தோன்றியதோ திருமலையில் தொடரருளாய்த் திருவடிகள்
ஊன்றியதோ என்தலையில் உவகையுடன் கலியுகத்தின்
ஆன்றபரம் பொருளாக அவதாரங் கொண்டிறங்கித்
தேன்பலாவாய்த் தித்திக்கும் தெய்வீகப் பேரருளே.
அருளாட்சி செய்கின்ற அதிசயமே பொற்பதமே
இருளாட்சி நீக்கியொளி இசையாட்சி நடமிடவே
திருவாட்சி குடியிருக்கும் திருமலையின் திசையெங்கும்
தருமாசித் திருக்கரங்கள் தாயன்பின் அருட்கரங்கள்.
கரங்களெலாம் நான்மறைகள் கண்களெலாம் சுடரொளிகள்
நெருங்கிவரும் அன்பருக்கு நின்றபடி நிறையருளும்
திருக்கோலம் நெடுங்கோலம் திருமாலின் எழிற்கோலம்
உருக்கொள்ளும் உலகளந்த உத்தமனாய் அருட்கோலம்.
கோலத்தால் மனங்கவர்ந்து கொள்ளையிடுங் கள்வனவன்
சீலத்தால் வெண்ணையுண்டு செவ்வாயால் பொய்மொழிமாய்
மாலத்தால் மயக்கத்தை மனிதர்க்குத் தந்துவினை
ஓலத்தால் நெருக்குண்ட உணர்வழிக்கும் உத்தமனே.
உத்தமனாய்ச் சொன்னசொல்லை உறுதிபட உயிர்க்கெல்லாம்
சத்தியமாய்த் தந்தருளும் சரணாக தியென்னுமொரு
தத்துவத்தைப் போதித்த தயாபரனே சார்ந்தவர்க்கு
நித்தியமாய் வைகுந்த நிழலருளும் வேங்கடனே.
வேங்கடனே பரம்பொருளாம் வியன்பொருளாய் வருந்தெய்வம்
தாங்குகின்ற திருமலையே தாரணியில் வைகுண்டம்
ஓங்கியுல களந்தவனே உயிர்களினைக் கரைசேர்க்க
வாங்கக்க ரம்நீட்டும் வள்ளலேயென் வாழ்வன்றோ
வாழ்வினில் வளம்சேர்க்கும் வண்ணத்தேன் பாக்களினை,
சூழ்கலியின் துயர்நீங்கச் சொன்னசொல் மாலையினை
வாழ்விக்கும இளவல்ஹரி ஹரன்நா வார்த்தைகளால்
ஊழ்வினையை வென்றிடலாம் உளமுருகப் பாடிடவே.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.