இளமை புதுப்பிப்பு!
முகத்தில் படரத் தொடங்கியிருந்தது
வெள்ளி நிறத்தில் மாறிய மயிர்கள்
முன்னால்
பளிச்சிட்டுக் காட்டும் கண்ணாடி
முன்னின்று சிரிக்கத் தொடங்கியது
சில கருப்பு நிற மயிர்கள்
பேசத் தொடங்கின
'இளமை வெளுத்துப் போன பின்னே
உன்
சுண்டிய ரத்தம் அடங்கும்”
உதடுகளின் மேல்
காடாய் முளைத்த கருப்பு நிற மயிர்களும்
சில பேசத் தொடங்கின
'மீசை நரைத் திரை முன்னின்று
ஆசை எத்தனை எத்தனையோ
அத்தனையும்
வாலிபத்தால் அடக்கியாண்டு விடு”
என்று
முறுவலித்தது.
இளமை என்னும் பெரும் பூதம்
கண்ணாடித் திரை வழியே
எட்டிப் பார்த்து விட்டுக்
கணத்தில் மறைந்தது.
முகத்தின் இளமை
எங்கோ தொலைந்து போய்விட்டதோ
புன்னகை
மின்னி மறைந்து மீண்டும் துளிர்த்து
மீண்டும் மறைவதா?
சவரக் கத்தியொன்றின் கைகளில்
அவன்
இளமை புதுப்பிப்பு.
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.