அக்னிப்பறவை
செப்புகின்றேன் செந்தமிழன் பெருமைதனை!
செவிமடுப்பீர் இச்செந்தமிழ்க் கவிதனை…
கடல் அலைகள் கவி தொடுக்கும்
படகதனில் பணிநடத்தும்
திடவுறுதி வாய்த்திட்ட குடும்பத்தில் பிறந்திட்டீர்!
தடைகளைத் தகர்த்தெறிந்தே தனித்துவமாய் நின்றிட்டீர்!
வீடுவீடாய் செய்தித்தாள் நீ
விறுவிறுவென வீசுகையில்
இவ்வியனுலகு நினைத்ததுண்டோ?
விண்ணை நீ அளப்பாய் என்று?
ஏங்கவைக்கும் ஏழ்மைதனைத்
தூங்கவைத்து நீவிழித்தாய்!
தூங்கவிடா கனவுகளைத்
தீங்கரும்பாய்த் தேன்கனியாய்
ஈங்கெமக்கே அளித்திட்டாய்!
தூய வளனாரின் பெருமைதனை
உன் சுயசரிதம் உரைக்கிறது!
அருட்தந்தை செக்குரிராவின்
செயலதிலே சிறக்கிறது!
புத்தில்லம் பற்றி நீ
புனைந்திட்ட கருத்துக்கள்
தித்திப்பாய் எம் மனதில்
புது வரலாறு படைக்கிறது!
சென்னை எம்.ஐ.டி. யில்…
ஓரங்கட்டப்பட்ட விமானத்தின் மீது
ஓர் இனம்புரியாத மோகம் என்று
நீ உரைத்திட்ட பொழுதுதான் புரிகிறது…
நீ மோகம் கொண்ட விஞ்ஞானம்
அறிவுதாகம் கொண்ட மெய்ஞ்ஞானம் என்று…
காற்றியக்க அறிவியலும்
விமானக் கட்டமைப்பும்
கற்றறிந்தாய் கற்பதிலே களித்திட்டாய்!
வலிகளைச் சுவைத்தே
வாழ்க்கையை ரசித்தாய்
விஞ்ஞானம் தன்னின் விழுதென நின்றாய்
விழியென அமைந்தே வழியெமக் களித்தாய்!
அக்னி ஏவுகணை... அது
அரியதொரு சாதனை!
ஐயா,
அச்சாதனையின் பின்புலத்தில்
எத்துணை எத்துணை சோதனை!
உன் வலிமைமிகு வரலாற்றை
வரிக்குவரி வாசித்த போது
வன்நெஞ்சும் உருகிவிடும்
வாட்டமெல்லாம் கலைந்துவிடும்!
விண்ணாளும் விஞ்ஞானியாய்
வியப்பில் நீ திகழ்ந்தபோதும்,
மண்ணாளும் மன்னனாய்
அரியணையில் அமர்ந்த போதும்,
எண்ணமதில் எள்ளளவும்
தன்னைப் பற்றி எண்ணாத
அண்ணலே உன் வழி பற்றி
அனைவருமே நடந்திடுவோம்!
இளையோரின் கரம்பிடித்து
இந்நிலத்தில் நீ நடந்த
இணையற்ற பயணங்கள்…
இனிதான தருணங்கள்!
என்றென்றும் தொடர்ந்திடும் எம் எண்ணச் செயல்தனிலே…
தேசப்பற்றைத் திக்கெட்டும்
தீப்பொறியாய்ப் பரவச்செய்தாய்!
வாசலுக்கோர் விஞ்ஞானியை
வாவென்றே அழைத்திட்டாய்!
நீ விதைத்த வித்துக்கள்
விருட்சங்கள் ஆகிவிடும்!!
நீ கண்ட கனவுகள்
கருத்தேற்றம் கொண்டுவிடும்!!
விழுகின்ற துளிகளெல்லாம் உன்போல்
முத்துக்களாய்ப் பிறப்பதில்லை!
எழுகின்ற ஓசையெல்லாம் உன்போல்
ஏழிசையாச் சிறப்பதில்லை!
திறவாத இமைகளையும்
உறங்காமல் செய்திட்டாய்! - என்றென்றும்
மறவாமல் போற்றிடுவோம்!
மாமனிதா உன் புகழை!
பாரதம் சிறக்கட்டும் நீ
பயணித்த வழியினிலே…
வாழ்க! உன் வரலாற்றுச் சிறப்பு…
- முனைவர் சி. ஷகிலாபானு, திருச்சிராப்பள்ளி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.