காதல் விருப்பங்கள்
தங்கக் குடமொன்று தாங்கும் தண்ணீர்க்குடம்
தாவணித் தேரழகு தோன்றும் எழிற்கூடம்
செங்கமல முகந்தோன்றும் புன்னகை மலர்வனம்
செங்கரும்பாய் இனிக்கவரும் தமிழ்சொல்லும் மெல்லினம்
தளும்புதடி ஆசையெலாம் தண்ணீர்க்குடம்போலே
புலம்புதடி மனசெல்லாம் உன்னுடனே நிழல்போலே
விழிபேசும் மொழிகேட்க முடியாத சிலைபோலே
வழியினிலே நிற்கின்றேன் வருகையினை எதிர்பார்த்தே.
சேதியொன்று சொல்லிடடி சிட்டேதேன்சிட்டேகாதல்
நீதியொன்று சொல்லிடடி பட்டேவெண் பட்டேஆசை
மோதியின்று விட்டதடி மொட்டேபூ மொட்டேவாழ்வின்
பாதியாக வந்திடடி கிட்டேமிகக் கிட்டே மனதால்.
காதல் விருப்பங்கள் கைகூடி வரவேண்டும்
மாதே இளமாதே மனங்கொண்டு மணங்கொள்ளத்
தூதாய் விழிவேண்டாம் தூய மொழிபேசி
ஆதரவாய் அருகேவா அணைத்திடலாம் காமத்தீ.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.