தேடி அலையும் நாள்...
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
என எக்காளமிகும் நாம்
என்ன செய்தோம் தமிழுக்கு?
சங்கம் வைத்து வளர்த்த தமிழை
சாய்த்து விட்டோம் நாம்
உலகளாவ புகழ் பெற்ற திருக்குறளை
திருத்தினோம் (புது) குறளாக!
கம்பீரமாக ஆண்மையாளனைக்
காட்டியுரைத்த கம்பராமாயணத்தை
கற்காததால் பெற்றோம்
காமத்தின் பெருநோய் எய்ட்ஸை!
மூவேந்தரின் ஒற்றுமைக்காக
படைக்கப்பட்ட சிலம்பினாலும்
இரண்டு பட்டோம்? பட்டிமன்றத்தால்!
கற்பில் சிறந்தவள் கண்ணகியா?
கற்பில் சிறந்தவள் மாதவியா?
பங்காளிச் சண்டை கூடாதென
படைக்கப்பட்ட மகாபாரதம்
பார்ப்பதற்கு நடந்தது (தொலைக்காட்சியில்)
மாபெரும் போர்.
தமிழுக்காக உயிநீத்த
நந்திவர்மனின் நந்திக்கலம்பத்தை
அறியவில்லை தமிழர்கள்!
எல்லாம் அறிந்தும் பாடினான்
முண்டாசுக் கவிஞன்
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே என்று!
‘தமிழ்’ என்பதை விடுத்து
‘தமில்’ என்று முழக்கமிடுகின்றனர்
நவநாகரீகத்தினர்
நிதர்சனமாகக் கூறுவேன் நானும்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
என வாயளவில் எக்காளமிடும் நாம் - இனி
எங்கே தமிழ்? எங்கே தமிழ்? - எனத்
தேடி அலையும் நாள்...
வெகு விரைவில்...!!
- முனைவர் ம. தேவகி, தேனி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.