வா நண்பா வா!
வா நண்பா வா! வாழ்ந்து காட்டுவோம் வா!
வளமான தமிழகத்தின் தவப்புதல்வன் நீ அல்லவா?
வகுப்பறைக் கல்வியோடு வாழ்வியலும் கற்றிடுவோம்;
வள்ளுவம் பயின்றிடுவோம்; கம்பனில் தோய்ந்திடுவோம்;
அவ்வையின் அறவுரைகள் அனைத்தையும் அகத்திடுவோம்;
சித்தர்நெறி சிந்தை கொண்டு சீர்திருத்தம் புரிந்திடுவோம்;
அறிவுவளம் பண்புநலன் பொதுஅறிவும் பெற்றிடுவோம்;
தூய்மை பேணிடுவோம், துயர்வராமல் காத்திடுவோம்;
மாமழைநீரைச் சேமிக்க, ஏரி குளம் தகவமைப்போம்;
உழவை வளமாக்கி ஊர்செழிக்கச் செய்திடுவோம்;
நற்சேவையில் ஈடுபட்டு நாட்டை உயர்த்திடுவோம்;
சட்டதிட்டம் பின்பற்றிச் சமூகஅமைதி காத்திடுவோம்;
பெண்மையைப் போற்றிடுவோம்; பெரியோரை மதித்திடுவோம்;
பிரிவினை தவிர்த்திடுவோம்; பாசப்பயிர் விதைப்போம்;
பொருள்வளம் பெருக்கி, பொற்காலம் படைத்திடுவோம்;
இயற்கைவளம் மிகுத்திடுவோம்; இறைமேன்மை உணர்ந்திடுவோம்;
மனிதத்தின் மகத்துவத்தை மனத்தாக்கி, மாண்புகள் மிகுத்திடுவோம்;
மானுட வெற்றிக்கு மனமார வாழ்த்திசைப்போம்!
வா நண்பா வா! வாழ்ந்து காட்டுவோம் வா!
- குழந்தைசாமித் தூரன், புதுவை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.