மனிதநேயம் காப்போம்!

முடிமன்னரின் கீழான காலம்
முகமதியர் வந்த காலம்
ஆங்கிலேயர் ஆண்ட காலம்
எந்தக் காலத்தில் இருந்தது
நமக்கு வசந்த காலம்?
முதலாவதில் போர் அதிகம்
இரண்டில் கொலை அதிகம்
மூன்றில் அடக்குமுறை அதிகம்.
வசந்தத்தின் விழுக்காடு
எண்பதும், ஐம்பதும் முப்பதுதான்.
முழுமை தரும் மக்களாட்சி.
விடுதலை வேள்வியில்
வாங்கி வந்த வரமிது.
வாங்கிய வரத்தின் தரம்
என்னவெனத் தெரிந்தோமா?
நீரோடும் ஆறுகளை
மணற் பள்ளங்களாக்கி
ஏரோடும் கழனிகளை
கட்டாந்தரை ஆக்குவதா?
ஊருக்கேச் சோறுபோடும்
உழவனைப் பரலோகம் அனுப்புவதா?
தேசத்தந்தை இருப்பதை
மறந்து இலஞ்சத்திற்கு
நோட்டுகளை மாற்றுவதா?
பாலாறும் தேனாறும்
ஓடுமென நினைத்திருந்தால்
பாவ ஆறு ஓடுவதென்ன?
யாதும் ஊர்; யாவரும் சுற்றம்
என்றான் முப்பாட்டன்.
அம்மையோ அப்பனோ
அடித்துப் போட வந்தான் பேரன்
வாழும் வழி சொல்லும் குறள்,
வாழும் காவியங்கள்,
மதிவழி மனம்
இயக்கும் யோக சாதனைகள்
இரும்புப் பெட்டியில் பணம்
சேர்ப்பதே வாழ்க்கை என்று
மாறிப் போன கருமிகள் நாம்.
இந்தியா என்றொரு தேசம்,
அங்கு பிறந்திட வேண்டுமென
உலகோர் சொன்னது
ஒரு நாள்.
ஊழலும், வன்முறையும்,
வன்கொடுமையும்,
சுரண்டலும் களவும்
மலிந்த தேசமாய்
இன்றைய நாள்.
இதற்காகவா வாங்கித்
தந்தார்கள் விடுதலை?
நாளுக்கொரு பேச்சு
நாவினிலே நயவஞ்சகம்,
வக்கிரபுத்தி வந்ததால்
மனிதநேயம் எல்லாம்
போயே போச்சு.
நாட்டுப்பற்று நமக்கு
உண்டெனில் நாம்
களமிறங்குவோம் இனி...
நம் தலைமுறைகள் நிம்மதியாக
வாழும் வகை தேடுவோம்.
அன்பு, பண்பு, ஒழுக்கம் என்று
அனைவர் மனதிலும் விதைப்போம்.
மீண்டும் நல்லதொரு மாற்றம் காண
மனிதநேயம் காப்போம்.
- மீனாட்சி சுந்தரமூர்த்தி

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.