பெண்களால் நாம்பெற்ற பேறு
வீட்டின் குலவிளக்கு வித்தை முளைக்கவைத்துக்
காட்டும் குலதெய்வக் கற்பகமாம் - ஏட்டில்நம்
கண்களால் காணும் கனவை நனவாக்கும்
பெண்களால் நாம்பெற்ற பேறு.
விண்முட்டும் கோள்கள் வியக்கத் தயாரிக்கும்
கண்கொண்ட மெல்லினக் காரிகையர் - மண்கொண்ட
வண்ணமாய் வாழ்வின் வளங்கூட்டும் செல்வமெலாம்
பெண்களால் நாம்பெற்ற பேறு.
உலகினை ஆக்கவும் உண்மையைக் காக்கும்
நலம்பல செய் நாளும் - குலத்தினைக்
கொண்டு குவலயங் கூட்டவரும் சக்தியே
பெண்களால் நாம்பெற்ற பேறு.
நீதியைக் காக்கும நீதியை நீக்கிநல்
நீதியுரு வாக்கும் நிறைதவ - நீதியாய்
மண்ணில் உருவாக்கும் மற்றுயிர்த் தாய்மையே
பெண்களால் நாம்பெற்ற பேறு.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.