மழலைப் பட்டாளம்
அழகியதோர் இல்லமென்றால் நிறைந்தி ருக்கும்
அரும்மழலைச் செல்வங்கள் அழகைச் சேர்க்கும்
பழகியதோர் குறும்புகளால் மகிழ்ச்சி தோன்றும்
பாங்குடைய விளையாட்டைக் காணக் கண்கள்
விலகிடாது கண்டுமகிழ் கோலங் கொள்ளும்
வெள்ளையுள்ளம் வேண்டுமட்டும் மாயங் காட்டும்
மழலைமொழிப் பேச்சுகளோ மயக்க மூட்டும்
மழலைப்பட் டாளந்தான் சொர்க்க மாக்கும்.
குறுகுறுவென் றொருநடையில் கொள்ளை கொள்ளும்
குறும்புகளே வேடிக்கை யாக்கும் வாழ்வில்
சிறுகையளா வியகூழால் வாயில் ஊட்ட
தேவலோக அமுதமிங்குத் தோற்கும் செய்யும்
துறுதுறுவெ னவிங்குமங்கும் ஓடும் தெய்வத்
தோற்றந்தான் கண்முன்னே நமக்குக் காட்டும்
மறுபிறவி ஒன்றுண்டேல் மண்ணில் தோன்றி
மழலைப்பட் டாளத்தை ஆள வேண்டும்.
குழந்தைகளின் குறும்புகளால் ஈர்க்கப் பட்டே
கோகுலத்தில் அவதரித்த தெய்வக் கண்ணன்
குழந்தையெனத் தவழ்ந்திட்டான் மண்ணை யுண்டான்
குறுவாயில் மாநிலத்தைக் காட்டி நின்றான்
இளகியதாம் வெண்ணையினைத் திருடித் தின்றான்
யசோதையெனும் அன்னைமடி சேர்ந்து மண்ணில்
அழகியதோர் குறும்புகளால் காக்க வந்தான்.
அதுகாட்டும் குழந்தைகளின் பெருமை யன்றோ.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.