தமிழில் அறிவியல் கற்போம்!

மானுட வெற்றிக்கு மணிவாசல் இரண்டாம்
மனத்தை மகிழ்விக்கும் மாண்பமை இலக்கியம்,
வளத்தை வாய்ப்பாக்கும் அறிவியல் தொழில்நுட்பம்.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்
என்று இதையெடுத்து இயம்பினர் ஏட்டோர்!
செம்மொழித் தமிழில், கவிதையாய், கதைகளாய்
விடுகதையாய், புதிராய், வாய்பாடாய் வளம்மிகு
அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், வானியல்
நீரியல், பயிரியல், மண்ணியல், உணவியல்
இயற்பியல், இயங்கியல், விலங்கியல் இயந்திரவியல்
இன்ன பிற கருத்துகள் அனுபவஅறிவாய்
இளைஞரும் பயின்று இன்புறும் இயல்பில்
இயன்று வருவதை அறிவோர் ஒப்புவர்!
அவனியில் அறிவியல் வளர்ந்த அந்தக்
காலத்தில் ஆங்கில நாட்டிடம் அடிமையாய்,
அன்னியரை அண்டி அரவணைப்புப் பெற்றிட,
அரசுப் பணியேற்றிட அதிகாரி ஆகிட
ஆங்கிலம் பயின்றனர்; அதுவும் நன்றே!
ஆயினும் அயலோர் அகன்ற பின்னும்
ஐயகோ! அடிமை மனநிலை அகலாதமாயையால்
ஆங்கில வழியில் அடிப்படை அறிவியலை
மழலையர் அழுதிட மனவழுத்தம் தந்தே
மதிவளர்ச்சி தேங்க மனப்பாடம் செய்தே
புதிய படைப்புகள் புனைந்திட வாய்ப்பின்றி
புறத்தோரைச் சார்ந்தே பைந்தமிழர் நலிகின்றார்!
ஆங்கிலம் என்பது அறிவுத் துறையன்று!
அதுவும் மொழியே! அறிந்திடு! உயர்ந்திடு!
தமிழில் நிகழாதோ? தமிழால் முடியாதோ?
இழிநிலை மாறி இன்னிலை எய்தவும்
புதியன படைக்கும் பெற்றிமை வாய்க்கவும்
தமிழில் அறிவியல் கற்றுத் தெளிவோம்!
தகுதி பெறுவோம்! தடுமாற்றம் இன்றியே.
- குழந்தைசாமித் தூரன், புதுவை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.