என்ன பொழப்புடா சாமி...?
வியாபாரத்தில் கலப்படம்
உணவோடு வேண்டாத பொருட்களை
வேண்டுமென்றே கலந்து விற்று
வேண்டும் லாபம் பார்க்கிறது
மனச்சாட்சியற்ற ஒரு கூட்டம்...
என்ன பொழப்புடா சாமி...?
கொலை செய்யாதிருப்பாயாக
பைபிளின் பத்துக் கட்டளைகளில் ஒன்று
ஆதரவற்றோருக்கு ஆதரவு காட்டி
உயிர் பறித்து எலும்பு விற்கிறது
பரமனின் பெயரில் இல்லம் வைத்து...
என்ன பொழப்புடா சாமி...?
கடவுளின் தேசம் அது
கடவுளுக்கே பிடிக்காததைச் செய்கிறது
படித்தவர்கள் அதிகம் அங்கு
மனித மனங்களைப் படிக்கத் தவறியது ஏனோ?
மனநோயாளியை அடித்து சுயமி எடுக்கிறது...
என்ன பொழப்புடா சாமி...?
பிச்சை புகினும் கற்கை நன்றே
கற்கப் பிச்சை எடுக்கும் நிலை
தரமான கல்வி என்ற பெயரில்
வசூல் கூடமாய்ப் பல பள்ளிகள் வசூலிக்கின்றன
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாய்...
என்ன பொழப்புடா சாமி...?
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.