நான் யார்...?
எப்போதும் போலவே
விடிகிறது காலை
எழ மனமில்லை
நான் யார்?
நான் யார்?
திரும்பிய திசையெல்லாம்
ஒலித்தது வினா.
நான் யார்…?
நீ துரோகி...!
தன்னம்பிக்கையற்றவன்...!
முட்டாள்...!
பைத்தியம்...!
போதும் போதும்
தலையே வெடித்து விடும்
போலிருந்தது.
நான் யார்?
நான்
விசயனைக் காப்பாற்றிய
கண்ணணுமில்லை
கா்ணனைக் காத்த
துரியோதனனுமில்லை
நான் யார்?
பணம் பற்றில்லை
பெண் மோகமில்லை
இரண்டும் இல்லையென்றால்
மனிதனில்லை.
நான் யார்?
நான் களிமண்
எந்த உருவமும்
என்னில் சாத்தியம்
நான் பாறை
எந்த சிலையும்
என்னில் உண்டு
நான் நாணல்
தென்றல் தாலாட்டும்
புயல் பாராட்டும்
தலை வணங்குவேன்
நான் கழுதை
சில நேரம் உப்புமூட்டை
சில நேரம் பஞ்சுப்பொதி
நான் மழை
இடம் பொருத்து
நிறம் உண்டு
நான் நட்பு
சில நேரம் காதல்
சில நேரம் பகை
நான்
கூப்பிட்ட குரலுக்கு
ஓடி வரும் நாய்
அழைத்தால் வரும்
வாடகையில்லா வண்டி
கட்டளையிட்டால்
கட்டுப்படும்
மனித எந்திரம்
இப்படி
எடுப்பார் கைப்பிள்ளையானேன்
இலக்கில்லாமல் பயணம்
போனேன்.
நான் யார்...?
- புலவர் இரா. முரளி கிருட்டினன், திருச்சிராப்பள்ளி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.