அவனுடன் ஒரு உரையாடல்
அவ்வப்போது அந்த அறையின் உள்சென்று
அவனுடன் நான் உரையாடுவதுண்டு
எப்போது வந்தாய் என்று கேட்பான்
'இப்போது” என்று பதில் சொல்வேன்
கனீரென்று ஒலிக்கும் குரலில்லை
சைகைகள் ஏதுமில்லை
எல்லாம் மதுரமான அந்த
விழி அசைவுகள் மட்டும் தான்
என் விரல்களில் ஐந்து
வட்டமாக இருக்கும்
என்னுடைய தாடையில்
வளர்ந்திருக்கும் ரோமங்களை
நீவிவிட்டபடி
அவன் முன் நின்று
பேசிக் கொண்டிருப்பதை
கேட்கவே அவன் விரும்புவான்
அவனது கண்கள் வசீகரமானது இல்லை
என்று சொல்லக் கூடிய தைரியம்
நிச்சயம் எனக்கு இல்லை
ஆமாம்
கண்ணாடிச் சட்டத்திற்குள் இருக்கும்
அவனது ஓவியத்தில்
இறந்த அன்றைய இரவில்
என்னோடு பேசிக் கொண்டிருந்த
அவனது தீட்சண்யமான அந்த விழிகள்
மிக அழகான தூக்கத்தில்
ஆழ்ந்து கொண்டிருந்தன
என்று மட்டுமே
இப்போதும்
எனக்கு எண்ணத் தோன்றுகிறது.
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.