கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன்
காதுகள் சிலருக்கு கண்களாக உருமாறி
அவர்களுக்கு ஒலிகளின் மூலம்
வழிப்பாதைகளைக் காட்டுகின்றன.
ஓரிடத்தில் எழுகிற அத்தனை ஒலிகளையும்
கண்களாக மாறிய செவிப்பறைகள்
அவர்களுக்கு நிறமற்ற ஒரு நிறமாகத் தெரிகிற
நிறமற்ற காட்சிகளை அவர்களுக்கு ஒலிக்காட்சியாக
எல்லாவற்றையும் சுட்டிக் காட்டுகின்றன.
காட்சிகளுக்கு வருணனைகளாக
ஒலிகள் வாசிப்புச் செய்து காட்டுகின்றன.
நத்தைக் கூடு செவிப்பறையில்
சில ஒலிகள்
குப்பைகளெனக் கொட்டுகின்றன.
விரல்கள் நத்தைக் கூட்டினுள் அவ்வப்போது
ஒலிகளால் ஏறிய மாசுகளை அகற்றுகின்றன.
“பிம்பீம்” பேரொலி சாலைகளைக் கடக்கிற போதும்
“கூ”வென ஒலியெழுப்பும் ரயில்களின் வாழ்க்கைகள்
இரைச்சல்கள்
வாழ்க்கையை இயந்திரமாக்கி
எண்ணெய் பிசுபிசுத்தது போல்
உள்ளும் புறமும் இயந்திரமாகிப் போன ஒருவனின்
நத்தைக் கூடு செவிப்றைகளுக்கு
மெட்ரோ சுரங்கப் பாதையில்
ஒருவன் உயிரோசைகளை மீட்டியபடி நின்று கொண்டு
கஸல்களை யாருக்காக
ஆலபானை செய்து கொண்டிருக்கிறான்.
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.